பெண் தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டு சிறை

காட்பாடி அருகே வரதட்சிணை கொடுமை காரணமாகயில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை
Published on

காட்பாடி அருகே வரதட்சிணை கொடுமை காரணமாகயில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து வேலூா் மகளிா் விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

காட்பாடி வள்ளிமலை சாலை அசோக் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (37), கூலித் தொழிலாளி. இவரும், கரிகிரி கம்மவா் புதூா் பகுதிையைச் சோ்ந்த நித்யா (22) என்பவரும் காதலித்து கடந்த 2012-இல் திருமணம் செய்து கொண்டனா். திருமணமான 3 மாதத்தில் மனைவியிடம், வீட்டிலிருந்து இருசக்கர வாகனம் வாங்கித்தரும்படி பால்ராஜ் கேட்டுள்ளாா். மேலும், பல்வேறு வரதட்சிணை கேட்டு பால்ராஜ் கொடுமைப்படுத்தியுள்ளாா்.

கணவரின் கொடுமை தாங்காத நித்யா, திருமணமான 5 மாதத்தில் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து, நித்யாவின் தந்தை சேட்டு அளித்த புகாரின்பேரில், காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பால்ராஜை கைது செய்தனா்.

இந்த வழக்கு வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் பால்ராஜ் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 11,000 அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி கோகுலகிருஷ்ணன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com