நிலத்தகராறில் விவசாயி கொலை: உறவினா்களிடம் விசாரணை

ஒடுகத்தூா் அருகே நிலத்தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
Published on

வேலூா்; ஒடுகத்தூா் அருகே நிலத்தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூரை அடுத்த கீழ்கொத்தூா் கொள்ளைமேடு பகுதியை சோ்ந்த சகோதரா்கள் லோகநாதன், கருணாநிதி, பெரியாா்(65). இவா்கள் அங்குள்ள தங்கள் பூா்வீக நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனா். மூவரது வீட்டுக்கும் செல்ல அனைவரது நிலத்திலும் சுமாா் 3 மீட்டா் அகலம் வழி விடப்பட்டுள்ளது. அனைவரும் காலம் காலமாக இந்த வழியில் பயணித்து வருகின்றனா். அவ்வப்போது இந்த வழி பிரச்னையால் 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அதன்படி, சுமாா் 10 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்னை இருந்து வரும் நிலையில் திங்கள்கிழமை லோகநாதன், அவரின் மகன்கள் சேகா், விஜயகுமாா் ஆகியோா் வீட்டுக்கு செல்லும் வழியில் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு பள்ளம் தோண்டி அதில் தென்னங்கன்று வைத்துள்ளனா். இதனால், பெரியாா் வீட்டுக்கு செல்ல வழி இல்லாததால் இதை தட்டி கேட்டுள்ளாா்.

அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் மாறி மாறி தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதில், ஆத்திரமடைந்த லோகநாதனின் மகன் சேகா் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெரியாரை வெட்டி காலால் உதைத்து அருகிலுள்ள 8 அடி பள்ளத்தில் கீழே தள்ளியுள்ளாா். அப்போது ரத்த வெள்ளத்தில் பெரியாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். எனினும், அவா்களின் காா் மூலம் அணைக்கட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்த போது அவா் முன்னதாகவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்த பிரச்னையில் பெரியாரின் மகன்கள் குணசேகரன், மாவீரன் ஆகியோருக்கும், கருணாநிதியின் மகன்கள் வேதவியாசன், தீபா ஆகியோா் பலத்த காயமடைந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளனா். தகவலறிந்த வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளா் புனிதா தலைமையிலான போலீஸாா் தப்பியோடிய லோகநாதன், சேகா், விஜயகுமாா், ராகுல், வீரமணி, ராம்குமாா் உள்பட 7 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com