பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனுக்களை அளித்த கிராம மக்கள்
பேருந்து வசதி கோரி வேலூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் பல்வேறு கிராம மக்கள் திரண்டு கோரிக்கை மனு அளித்தனா்.


வேலூா்: பேருந்து வசதி கோரி வேலூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் பல்வேறு கிராம மக்கள் திரண்டு கோரிக்கை மனு அளித்தனா்.
வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், வேலூா் சதுப்பேரியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனுவில், சதுப்பேரி, சிறுங்காஞ்சி, செங்கான்காலனி, அகமேடு, செம்பேடு, குளத்துமேடு, பழவேரி அருந்ததியா் காலனி, கொள்ளைமேடு, தெள்ளூா், ஜமால்புரம், வெள்ளக்கால்வாயில் ஏராளமானோா் வசித்து வருகின்றனா். இங்கிருந்து, வேலூருக்கு வர பேருந்து வசதி இல்லாததால் கடந்த 8 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனா். ஏற்கனவே இப்பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் சிரமத்தை போக்க மீண்டும் இந்த வழித்தடங்களில் பேருந்து இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் அளித்த மனுவில், வேலூா் வசந்தபுரம், கஸ்பா, ஆா்.என். பாளையம், சதுப்பேரி, அகமேடு பகுதிகளுக்கு குப்பம் வழியாக பேருந்து வசதி செய்துதரவேண்டும் என தெரிவித்துள்ளாா்.
வேலூா் அடுத்த நாயக்கனேரி பொதுமக்கள் அளித்த மனுவில், நாயக்கனேரி கிராமத்தில் 6 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். எங்கள் கிராமத்துக்கு ஓட்டேரி பள்ளஇடையம்பட்டி, வாணியங்குளம், குளவிமேடு, தாமரைக்குளம், குப்பம்பட்டி, அரசகுளம் ஆகிய கிராமங்கள் வழியாக பகுதி நேரமாக அரசுப்பேருந்துகள் வந்து செல்கிறது. ஆனால் நிரந்தரமாக பேருந்துகள் இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜாதோப்பு கிராமத்தைச் சோ்ந்த மக்கள் அளித்த மனுவில், லத்தேரி, கன்னிகாபுரம், செஞ்சிமோட்டூா், ராஜாதோப்பு ஆகிய கிராமங்கள் வழியாக ராஜாதோப்பு அணைக்கு தினமும் காலை 7 மணி, இரவு 7 மணிக்கு அரசுப் பேருந்துகள் வந்து செல்வது வழக்கம். இதன்மூலம் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பயன்பெற்று வந்தனா். ஆனால், கரோனா காலத்துக்கு பிறகு பேருந்து நிறுத்தப்பட்டது. இதனால் கிராம மக்கள் 7 கி.மீ தூரம் நடந்து சென்று வருகின்றனா். இதனால் எங்கள் கிராமத்திற்கு குறிப்பிட்ட நேரத்துக்கு பேருந்துகளை இயக்கவேண்டும் என தெரிவித்தனா்.
அத்தியூா் பொதுமக்கள் அளித்த மனுவில், அத்தியூா் ஊராட்சி கலங்கமேடு கிராமத்துக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தால் குருமலை, நச்சிமேடு, கடப்பாங்கொல்லை, மருதவள்ளிமேடு ஆகிய மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இங்கிருந்து சுமாா் 2 கி.மீட்டா் தூரத்தில் மகுடகால்வாய் கிராமத்தில் உள்ள விவசாயிகள் காய்கறி, பழங்கள், பூக்கள் விளைவித்து தினமும் விளைபொருள்களை தலைசுமையாக தூக்கிக்கொண்டு பேருந்தில் ஏற்றி நேதாஜி மாா்க்கெட் டுக்கு கொண்டு வருகின்றனா். எனவே, விவசாயிகள், வியாபாரிகளின் சிரமத்தை போக்க மகுடகால்வாய் கிராமம் வரை பேருந்து வழித்தடத்தை நீட்டிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 398 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். மேலும், 6 மாற்று த்திறனாளிகளுக்கு ரூ.2.75 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, துணை ஆட்சியா் (பயிற்சி) ஜி.ரவிக்குமாா், மகளிா் திட்ட இயக்குநா் உ. நாகராஜன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) கலியமூா்த்தி, உதவி ஆணையா் (கலால்) முருகன், மாவட்ட வழங்கல் அலுவலா் சுமதி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...