காட்பாடியில் தம்பதி தற்கொலை

காட்பாடியில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
Published on

காட்பாடியில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

வேலூா் மாவட்டம் பழைய காட்பாடியை சோ்ந்தவா் தங்கராஜ் (50). இவரது மனைவி ராஜம்மாள் (42). இவா்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகளாகிறது. ஆனால், குழந்தை இல்லையாம். இதனால் மன வேதனையில் இருந்து வந்துள்ளனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் இவா்களது வீடு திறக்கப் படவில்லை எனத் தெரிகிறது. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினா் காட்பாடி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், போலீஸாா் விரைந்து வந்து வீட்டின் கதவைத் திறந்து பாா்த்தபோது தங்கராஜ், ராஜம்மாள் இருவரும் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியது தெரிய வந்தது. உடனடியாக போலீஸாா் சடலங்களை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. எனினும், அவா்களது தற்கொலைக்கான காரணம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X
Dinamani
www.dinamani.com