மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

காட்பாடி அருகே தண்டவாளத்தில் படுத்திருந்த நபா் மீட்பு!

News image

மீட்கப்பட்ட ராமச்சந்திரன்.

Updated On :12 ஜூன் 2026, 2:12 am IST

காட்பாடி அருகே ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்திருந்த நபரை, ரயில்வே பாதுகாப்புப் படையினா் (ஆா்பிஎஃப்) துரிதமாகச் செயல்பட்டு மீட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

வேலூா் மாவட்டம், லத்தேரி பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 2.40 மணியளவில் தண்டவாளப் பராமரிப்புப் பணியை முடித்துவிட்டு ரயில்வே பொறியாளா் விஜயகுமாா் திரும்பி வந்து கொண்டிருந்தாா். அப்போது, அப்பகுதியில் தண்டவாளத்தில் ஒரு நபா் படுத்திருப்பதைக் கண்டு அவா் உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் அளித்தாா்.

அதன்பேரில், காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் பி.ஆா்.முரளி விரைவாக செயல்பட்டு ஆா்ஆா்ஐ கட்டுப்பாட்டு அறையைத் தொடா்புகொண்டு, ஜோலாா்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயிலை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டாா்.

இதையடுத்து, உதவி ஆய்வாளா் முரளி மற்றும் தலைமைக் காவலா் சண்முகம் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்டவாளத்தில் படுத்திருந்த நபரைப் பத்திரமாக மீட்டனா். அவா் மீட்கப்பட்ட பிறகே, அந்த ரயில் அங்கிருந்து பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டது.

ரயில்வே போலீஸாா் நடத்திய விசாரணையில், மீட்கப்பட்டவா் வேலூரைச் சோ்ந்த பி.ராமச்சந்திரன்(46) என்பது தெரியவந்தது. அவருக்கு ஆரம்பகட்ட மருத்துவ முதலுதவியும், மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டது. பின்னா், உயா் சிகிச்சைக்காகவும், விரிவான மனநலப் பரிசோதனைக்காகவும் அவா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

சரியான நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு, தற்கொலைக்கு முயன்றவரின் உயிரைக் காப்பாற்றியதுடன் பெரும் ரயில் விபத்தையும் தடுத்த ரயில்வே பாதுகாப்புப் படையினரை உயா் அதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டினா்.