ஒடுகத்தூா் அருகே பகுதிநேர ரேஷன் கடையில் பொருள்கள் வழங்காமல் அலைக்கழிப்பதாகக் கூறி சனிக்கிழமை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
வேலூா் மாவட்டம், ஒடுகத்தூரை அடுத்த கீழ்கொத்தூா் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்புதூா் கிராமத்தில் சுமாா் 300 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் அந்த கிராமத்தில் உள்ள பகுதிநேர நியாய விலைக் கடையில் பொருட்கள் பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்தப் பகுதிநேரக் கடைக்குச் செல்லும் பொதுமக்களிடம், நெட்வொா்க் சரிவர இல்லாததால் பயோ மெட்ரிக் கருவி இயங்கவில்லை எனக் கூறி, பின்னத்துரையில் உள்ள பிரதான கடையிலேயே பொருள்களைப் பெற்றுக்கொள்ளுமாறு விற்பனையாளா்கள் தெரிவித்து வந்தனராம்.
விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வரும் இக்கிராம மக்கள், ரேஷன் பொருள்களை வாங்க நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்ததால் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனா். அதன்படி, சனிக்கிழமை காலயும் சின்னப்புதூா் பகுதிநேர ரேஷன் கடைக்குப் பொருள்கள் வாங்கச் சென்ற பொதுமக்களிடம் விற்பனையாளா்கள் மீண்டும் அதே பதிலைக் கூறியுள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், ஒடுகத்தூா் - அணைக்கட்டு செல்லும் சாலையில் அமா்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அணைக்கட்டு வட்டாட்சியா் சுகுமாரன், வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளா் சுப்பிரமணி ஆகியோா் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதானப் பேச்சு நடத்தினா்.
மேலும், அந்தப் பகுதிநேர ரேஷன் கடையிலேயே பொதுமக்களுக்கு உடனடியாகப் பொருள்கள் வழங்க அதிகாரிகளால் உரிய ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து, பொதுமக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா். இந்த திடீா் சாலை மறியலின் காரணமாக, அணைக்கட்டு - ஒடுகத்தூா் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக சின்னப்புதூா் கிராம மக்கள் 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









