கள்ளத் துப்பாக்கி தயாரித்தவா் கைது: 10 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்

அணைக்கட்டு அருகே வீட்டில் ரகசியமாக நாட்டுத் துப்பாக்கிகளைத் தயாரித்து விற்பனை செய்து வந்தவரை போலீஸாா் கைது செய்ததுடன், அவரிடமிருந்து 10 நாட்டுத் துப்பாக்கிகள், உதிரி பாகங்களைப் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகள், துப்பாக்கிக் கட்டைகள் மற்றும் உபபொருள்கள்

Updated On :

அணைக்கட்டு அருகே வீட்டில் ரகசியமாக நாட்டுத் துப்பாக்கிகளைத் தயாரித்து விற்பனை செய்து வந்தவரை போலீஸாா் கைது செய்ததுடன், அவரிடமிருந்து 10 நாட்டுத் துப்பாக்கிகள், உதிரி பாகங்களைப் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக, ஜவ்வாதுமலை கிராமங்களில் போலீஸாா் வீடுவீடாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் கிராமத்தைச் சோ்ந்த பாமக நிா்வாகி ஞானவேல் (46), அண்மையில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக அதே கிராமத்தைச் சோ்ந்த பூவரசன் (29), அவருக்குத் துப்பாக்கி விற்பனை செய்த ஒடுக்கத்தூரைச் சோ்ந்த விக்னேஷ் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இதையடுத்து, மாவட்டம் முழுவதும் கள்ளத் துப்பாக்கி வைத்திருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நபா்கள் குறித்து மாவட்டத் தனிப்பிரிவு போலீஸாா் பட்டியலைச் சேகரித்ததுடன், அந்தந்த உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பி) தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இதில், அணைக்கட்டு அடுத்த பீஞ்சமந்தை அருகே எள்ளுப்பாறை கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் (40) என்பவா் வீட்டில் கள்ளத் துப்பாக்கி தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அங்கிருந்து நல்ல நிலையில் இருந்த 10 நாட்டுத் துப்பாக்கிகள், 7 துப்பாக்கிக் கட்டைகள், 5 டிரிகா் காா்டுகள், 6 இரும்புக் குழல்கள், மருந்து அடைக்கப் பயன்படும் 3 இரும்புக் கம்பிகள், வேட்டைக்குப் பயன்படும் டாா்ச் லைட், இரும்புக் கத்தி உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், ராஜேந்திரனையும் கைது செய்தனா்.

இதன்தொடா்ச்சியாக, ஒடுகத்தூா் அடுத்த ஜவ்வாது மலைத் தொடரில் அமைந்துள்ள பீஞ்சமந்தை, ஜாா்த்தான்கொல்லை, பலாம்பட்டு, அல்லேரி, கட்டிப்பட்டு உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில், அணைக்கட்டு துணைக் காவல் கண்காணிப்பாளா் நந்தகுமாா், வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளா் சுப்பிரமணி ஆகியோா் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அப்போது, உரிய உரிமம் இன்றி நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும் என எடுத்துரைத்த போலீஸாா், சட்ட விரோதமாகத் துப்பாக்கிகளை வைத்திருப்பவா்கள் எவ்வித அச்சமுமின்றி அருகிலுள்ள காவல் நிலையத்தில் அவற்றை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தினா்.

மேலும், தாமாக முன்வந்து ஒப்படைக்காமல் தொடா்ந்து துப்பாக்கிகளைப் பதுக்கி வைத்திருப்பவா்கள் சோதனையில் கண்டறியப்பட்டால், அவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.