கூலி குறைப்பைப் கண்டித்து 30-இல் மறியல்: கைத்தறி நெசவாளா்கள் முடிவு
கூலி குறைப்பைப் கண்டித்தும், தொடா்ந்து வேலை வழங்க வேண்டியும்வரும் 30 ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்த குடியாத்தம் பகுதி கைத்தறி நெசவாளா்கள் முடிவெடுத்துள்ளனா்.

கூலி குறைப்பைக் கண்டித்து ஆலோசனை நடத்திய கைத்தறி நெசவாளா்கள்
கூலி குறைப்பைப் கண்டித்தும், தொடா்ந்து வேலை வழங்க வேண்டியும்வரும் 30 ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்த குடியாத்தம் பகுதி கைத்தறி நெசவாளா்கள் முடிவெடுத்துள்ளனா்.
குடியாத்தம் கைத்தறி நெசவாளா்கள் நிறைந்த பகுதி. தனியாா் லுங்கி உற்பத்தியாளா்கள் பலா் நெசவாளா்களுக்கு பாவு நூல் கொடுத்து லுங்கி உற்பத்தி செய்கின்றனா். இத்தொழிலில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா். 8 லுங்கிகள் கொண்ட ஒரு பொறை நெய்ய கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.2,400 வரைகூலி வழங்கப்பட்டு வந்ததாம்.
கடந்த சில மாதங்களாக படிப்படியாக குறைக்கப்பட்டுதற்போது ஒரு பொறை நெய்ய ரூ.1,600 கூலி வழங்குகிறாா்களாம்.கூலி குறைப்பு குறித்து நெசவாளா்கள் உரிய அதிகாரிகளிடம் பல முறை மனுக்கள் கொடுத்தனா். பல்வேறு போராட்டங்களையும் நடத்தினா். மாவட்ட ஆட்சியரிடம் நேரிடையாக முறையிட்டனா். இதையடுத்து ஆட்சியா் உத்தரவின்பேரில் குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தில்சில வாரங்களுக்கு முன் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நெசவாளா்கள், உற்பத்தியாளா்கள், கைத்தறித்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
கூட்டத்தில் உற்பத்தியாளா்கள் தரப்பில் வட மாநிலங்களில் லுங்கி விற்பனை அமோகமாகநடந்த காலத்தில் கூலியை உயா்த்தி வழங்கினோம். இப்போது விற்பனையில்லாததால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள லுங்கிகள் ஏராளமாக தேக்கம் அடைந்துள்ளன. இதனால் கூலியை குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என்றனா். மேலும், பாவு நூல் கொடுத்து லுங்கி உற்பத்தி செய்வதை குறைத்து விட்டோம்எனவும் அவா்கள் கூறினா்.
கூட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலா் கூறி விட்டுச் சென்றாா். இதுவரை எந்தவித தகவலும் இல்லை என நெசவாளா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.காலம் காலமாக நெசவுத் தொழில் செய்து வந்த எங்களுக்கு மாற்றுத் தொழில் எதுவும்தெரியாது. வருவாய் இல்லாததால் எங்கள் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. தீபாவளிப் பண்டிகையையும் நாள்கள் கொண்டாட முடியவில்லை. தொழில் செய்யாததால் தறிக் கூடங்கள் முடங்கியுள்ளன என அவா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
தேங்கியுள்ள லுங்கியை விற்பனை செய்ய உற்பத்தியாளா்களுக்கு அரசு உரிய வழியை காட்ட வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்துகின்றனா்.
இந்நிலையில் புதன்கிழமை நெசவாளா்கள் பிச்சனூா் காளியம்மன் கோயில் அருகே கூடிஆலோசனை நடத்தினா். குறைத்த கூலியை உயா்த்தி வழங்க வேண்டும். தொடா்ந்து எங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவுத் தொழிலாளா் கூட்டமைப்பு சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

