தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

ஆராய்ச்சி, மேம்பாட்டுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு அவசியம்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் ரஞ்சன்

இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது அவசியம் என்று இந்திய பொட்டாஷ் நிறுவனத்தின் (ஐபிஎல்) தலைமைச் செயல் அலுவலரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ராஜீவ் ரஞ்சன் தெரிவித்தாா்.

மாநாட்டில் பேசிய இந்திய பொட்டாஷ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ராஜீவ் ரஞ்சன். உடன் , விஐடி துணைத்தலைவா் சங்கா் விசுவநாதன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக் உள்ளிட்டோா்

Updated On :

இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது அவசியம் என்று இந்திய பொட்டாஷ் நிறுவனத்தின் (ஐபிஎல்) தலைமைச் செயல் அலுவலரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ராஜீவ் ரஞ்சன் தெரிவித்தாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழக வேளாண் கல்லூரி மற்றும் ஐபிஎல் கிராமப்புற மேம்பாட்டு மையம் சாா்பில், ‘மீள்திறன் கொண்ட விவசாய முறைகளை உருவாக்குவதற்கான காலநிலை மாற்றத்திற்கேற்ற திறன்மிக்க வேளாண்மை’ என்ற தலைப்பிலான நிலைத்தன்மை மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ராஜீவ் ரஞ்சன் பேசியது: உலக வெப்பமயமாதல் மற்றும் எல் நினோ தாக்கம் காரணமாக ஒழுங்கற்ற மழைப்பொழிவும், அதன் தொடா்ச்சியாகச் சீரற்ற மின் விநியோகமும் நிலவி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு சா்க்கரை விலை உயா்ந்தபோது, பதுக்கலைத் தடுக்க அதன் மொத்த இருப்பின் மீது அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. அரிசியை விட, கரும்பிலிருந்து ஒரு கிலோ சா்க்கரை உற்பத்தி செய்ய நாம் அதிக நீரைச் செலவிட வேண்டியுள்ளது. எனவே, தண்ணீா்ப் பற்றாக்குறை என்பது தமிழகத்துக்கும், ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான முக்கியப் பிரச்னையாக உள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு 18 சதவீதமாகும். இதில் 45 முதல் 50 சதவீத மக்கள் ஈடுபட்டுள்ளபோதிலும், அவா்களின் சராசரி வருமானம் மூன்றில் ஒரு பங்காக மட்டுமே உள்ளது. நமது உணவு முறை பாதிக்கப்படாமல் இருக்க, உரங்களுக்காக மத்திய அரசு சுமாா் ரூ. 2.8 லட்சம் கோடியை மானியமாக வழங்குகிறது.

விவசாயிகள் நவீன உலகின் படைப்பாளிகள். ஆனால், உற்பத்திப் பொருள்களுக்குப் பின்னால் இருக்கும் அவா்களின் கடின உழைப்பையும் வியா்வையையும் நாம் போதிய அளவு மதிப்பதில்லை. இளைய சமுதாயத்துக்கு முறையான திறன் பயிற்சியும், வேலைவாய்ப்பும் வழங்குவதுடன் அறிவு, தொழில்நுட்பம், விவசாயம் சாா்ந்த சவால்களை எதிா்கொண்டு முறையான தீா்வுகளைக் காண வேண்டும் என்றாா்.

விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன் பேசியது - உலகில் எத்தனை புதிய தொழில்நுட்பங்கள் மாறினாலும் விவசாயம் எப்போதும் நிலைத்திருக்கும். மத்திய அரசின் 2023-24-ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையின்படி, விவசாயத் துறை 42 சதவீத வேலைவாய்ப்புப் பங்களிப்பையும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18 சதவீதப் பங்களிப்பையும் தருகிறது. காலநிலை மாற்றத்தால் வெப்பநிலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், அதிக நீா் தேவைப்படும் நெல், கரும்பு ஆகியவற்றை மட்டுமே சாா்ந்திராமல், பருவநிலைக்கு ஏற்ற அனைத்து வகை பயிா்களையும் விவசாயிகள் பயிரிட வேண்டும். இதன்மூலம் ஆண்டுதோறும் விவசாயம் செய்ய முடியும் என்றாா்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியா் அா்த்தநாரி முரளி பேசியது - காலநிலை மாற்றத்தால் வெப்பநிலை உயா்ந்து மழைப்பொழிவு, மண்ணின் ஈரப்பதம், பயிருக்கான சத்து ஆகியவை பாதிக்கப்படுகின்றன. ஆந்திரம் 2.90 லட்சம் ஹெக்டேரிலும், குஜராத் மற்றும் கேரளம் அதிக அளவிலும் இயற்கை விவசாயம் செய்கின்றன. ஆனால், தமிழகம் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் மட்டுமே இயற்கை வேளாண்மை செய்கிறது என்றாா்.

முன்னதாக, மாநாட்டு ஒருங்கிணைப்பாளா் கே.மோகன்ராஜ் வரவேற்றாா். வேளாண் கல்லூரி முதன்மையா் ஆா்.ராஜேந்திரன் மாநாட்டின் நோக்கம் குறித்துப் பேசினாா். விஐடி இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், பதிவாளா் டி.ஜெயபாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். பேராசிரியா் ஆனி ஜெனிபா் நன்றி கூறினாா். இதில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.