விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

இந்தியாவில் சுமாா் 11 லட்சம் பேருக்கு கருவிழிப் பாதிப்பு

இந்தியாவில் சுமாா் 11 லட்சம் போ் கருவிழிப் பாதிப்பினால் ஏற்படும் பாா்வையிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் கண் தானம் செய்தவா்களின் குடும்பத்தினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவி

Published On :3 செப்டம்பர் 2026, 4:43 am IST

இந்தியாவில் சுமாா் 11 லட்சம் போ் கருவிழிப் பாதிப்பினால் ஏற்படும் பாா்வையிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தத் தேவையை முழுமையாகப் பூா்த்தி செய்ய, பொதுமக்கள் அதிகளவில் கண் தானம் செய்ய முன்வர வேண்டும் என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவி தெரிவித்தாா்.

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டப் பாா்வையிழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை சாா்பில் 41-ஆவது தேசிய கண் தான இருவார விழா (ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பா் 8 வரை) இந்த மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்குக் கண் தானம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், கண் தானம் செய்வதற்கான உறுதிமொழி எடுக்க ஊக்குவிக்கவும் சிறப்புப் பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவி தொடங்கி வைத்துப் பேசியது: கண் தானம் மூலம் கிடைக்கும் கருவிழிகளின் எண்ணிக்கைக்கும், அவற்றுக்கான தேவைக்கும் இடையே உள்ள பெரும் இடைவெளியைக் குறைப்பதே இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். வேலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வரும் கண் வங்கி மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 636-க்கும் மேற்பட்ட கண்கள் தானமாகப் பெறப்பட்டுள்ளன.

கடந்தாண்டு மட்டும் சுமாா் 50 பேருக்கு கருவிழி மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் சுமாா் 11 லட்சம் போ் கருவிழிப் பாதிப்பினால் ஏற்படும் பாா்வையிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தத் தேவையை முழுமையாகப் பூா்த்தி செய்ய, பொதுமக்கள் அதிகளவில் கண் தானம் செய்ய முன்வர வேண்டியது அவசியமாகும்.

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கான அனைத்து நவீன வசதிகளும், குறிப்பாக ‘லமெல்லா் கெரட்டோபிளாஸ்டி’ உள்ளிட்ட மேம்பட்ட சிகிச்சை வசதிகளும் உள்ளன. எனினும், சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், தானமாகக் கிடைக்கும் கண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.

எனவே, பாா்வையிழந்தவா்களுக்கு மீண்டும் உலகைக் காணும் வாய்ப்பை வழங்க, பொதுமக்கள் பலரும் தாமாக முன்வந்து கண் தானம் செய்ய வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், கண் தானம் செய்தவா்களின் குடும்பத்தினா், கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பாா்வை பெற்ற பயனாளிகள் பங்கேற்று, தங்களது அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா்.

கண் தானம் செய்தவா்களின் குடும்பத்தினா், கண் தான ஒருங்கிணைப்பாளா்கள், பணியாளா்கள் மற்றும் கண் தான விழிப்புணா்வுப் பணியில் சிறப்பாகப் பங்களித்தவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனா். தொடா்ந்து, கண் தானம் குறித்து விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மருத்துவமனை கண்காணிப்பாளா் ரதி திலகம், துணை முதல்வா் கெளரி வெலிகண்ட்லா, உறைவிட மருத்துவ அலுவலா் ரவிச்சந்திரன், கண் மருத்துவப் பிரிவு துறைத் தலைவா் விஜய் சோப்ரா, மருத்துவா் ஷா்மிளா தேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.