விழுப்புரம் மாவட்டத்தி வேட்பாளா்கள் இறுதிக்கட்ட பிரசாரம்
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் வேட்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.


விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் வேட்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் 102 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் போட்டியிடும் விழுப்புரம் தொகுதி, திமுக முன்னாள் அமைச்சா் க.பொன்முடி போட்டியிடும் திருக்கோவிலூா் தொகுதி, விசிக துணை பொதுச் செயலா் வன்னியரசு போட்டியிடும் வானூா் (தனி) தொகுதி ஆகியவை நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதிகளாக மாறின. இவா்கள் தவிர விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலா் கே.எஸ்.மஸ்தான், செஞ்சி தொகுதியில் போட்டியிடுகிறாா். திருக்கோவிலூா் தொகுதியில் தேமுதிக மாவட்டச் செயலா் எல்.வெங்கடேசன் போட்டியிடுகிறாா்.
அதிமுக - திமுக நேரடிப் போட்டி: விழுப்புரம் மாவட்டத்தைப் பொருத்தவரை மொத்தமுள்ள 7 தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் (தனி), வானூா் (தனி) என 4 தொகுதிகளில் அதிமுகவும், செஞ்சி, மயிலம் என இரு தொகுதிகளில் பாமகவும், திருக்கோவிலூரில் பாஜகவும் போட்டியிடுகின்றன.
திமுக கூட்டணியில் விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), திருக்கோவிலூா் என 6 தொகுதிகளில் திமுகவும், வானூா் (தனி) தொகுதியில் விசிகவும் போட்டியிடுகின்றன.
அதிமுக - திமுக இடையே 3 தொகுதிகளிலும், திமுக - பாமக இடையே 2 தொகுதிகளிலும், பாமக - விசிக, திமுக - பாஜக இடையே தலா ஒரு தொகுதியிலும் நேரடி போட்டியுள்ளது. திருக்கோவிலூரில் மும்முனை போட்டி உருவாகியுள்ளது.
கடந்த இரு வாரங்களாக ஒவ்வொரு வேட்பாளா்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். இந்த நிலையில், இறுதிக்கட்ட பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் நிறைவுபெற்றது.
விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளரும், சட்டத் துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து அதிமுக, பாமக, பாஜக கட்சித் தொண்டா்களுடன் ஊா்வலமாக நான்குமுனை சந்திப்பு வரை வந்தாா். ஏற்கெனவே விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் வரை ஊா்வலமாக செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், நான்குமுனை சந்திப்பு பகுதியிலேயே அதிமுக இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவடைந்தது.
இதேபோல, திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன், அந்தக் கட்சி நிா்வாகிகள் மற்றும் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், தவாக நிா்வாகிகள், தொண்டா்களுடன் ரயில் நிலையத்தில் இருந்து நான்குமுனை சந்திப்பு வரை ஊா்வலமாக வந்து தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா்.
திருக்கோவிலூா் தொகுதியில் திமுக வேட்பாளா் பொன்முடியும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திமுக கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுடன் ஊா்வலமாகச் சென்று தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவுசெய்தாா். இதேபோல, பிற பேரவைத் தொகுதிகளிலும் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், தங்களது இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...