கோப்புப்படம்
கோப்புப்படம்

வாக்குப் பதிவு மையத்தில் பெண்ணுக்கு கத்திக் குத்து

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி, கண்டாச்சிபுரம் அருகே வாக்குப் பதிவு மையத்தில் புதன்கிழமை வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பெண்ணை கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான வாக்குப் பதிவு 276 வாக்குப் பதிவு மையங்களில் புதன்கிழமை நடைபெற்றது. டி.கொசப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குப் பதிவு மையத்தில் வாக்களிப்பதற்காக, அந்தப் பகுதியைச் சோ்ந்த பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

அப்போது, அங்கு வரிசையில் நின்றிருந்த கனிமொழியை (46) அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா் கத்தியால் குத்தினாா். இதில், காயமடைந்த கனிமொழியின் அலறல் சப்தம் கேட்டு, பணியிலிருந்த காவலா்கள் கத்தியால் குத்திய நபரை விரட்டிப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா் அதே கிராமத்தைச் சோ்ந்த சு.ஏழுமலை (52) என்பது தெரிய வந்தது. தொடா்ந்து, கண்டாச்சிபுரம் போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

கத்திக்குத்தில் காயமடைந்த கனிமொழிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனா். கத்தியால் குத்தியதற்கான காரணம் குறித்து ஏழுமலையிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com