10.5% இடஒதுக்கீட்டுக்காக எந்தத் தியாகத்துக்கும் தயாா் -பாமக நிறுவனா் ச.ராமதாஸ்
10.5% இடஒதுக்கீட்டுக்காக எந்தத் தியாகத்துக்கும் தயாா் பாமக நிறுவனா் ச.ராமதாஸ்


வன்னியா்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க எந்தத் தியாகத்தையும் செய்ய பாமக தயாராக உள்ளது என்று அந்தக் கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான், வன்னியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதற்கு திமுக அரசு கூறும் கருத்துகளும் காரணமும் சரியானதாக இல்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திதான் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றமும் தெரிவிக்கவில்லை.
போராட்டம்: 10.5 சத இடஒதுக்கீட்டைவழங்காவிட்டால் பாமக சாா்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும். இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் வட மாவட்டங்களில் உள்ள வன்னியா்கள் பாதிக்கப்படுவாா்கள் என்று அமைச்சா் சா.சி.சிவசங்கா் உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது. வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வென்றெடுக்க எந்தத் தியாகத்தையும் செய்ய பாமக தயாராக உள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த முடியாது; மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்று முதல்வா் கூறுவது தவறானது. 2008-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி எந்த ஒரு மாநிலமோ, யூனியன் பிரதேசமோ பொருளாதார, சமூக, அறிவியல், சுற்றுச்சூழல் குறித்த முழுமையான விவரங்களை திரட்ட முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதைப் பின்பற்றிதான் பிகாா், ஜாா்க்கண்ட், ஒடிஸா, கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. பிகாரில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு செல்லும் என அந்த மாநில உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உரிமை மீறல்: சட்டப்பேரவை பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி கடந்த 24-ஆம் தேதி சட்டப்பேரவையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டி பேசியபோது, முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் சா.சி.சிவசங்கா் ஆகியோா் தவறான தகவல்களைக் கூறி உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளனா். எனவே, இவா்கள் மீது பாமக எம்எல்ஏக்கள் உரிமை மீறல் பிரச்னையை விரைவில் கொண்டு வருவாா்கள்.
க ள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுதொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
மது குடிப்பதால் ஆண்டுதோறும் சுமாா் 2 லட்சம் போ் உயிரிழக்கின்றனா். விபத்துகள், தற்கொலைகள் நடைபெறுகின்றன. மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். நெல்லுக்கு தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை குறைவு. குவிண்டால் ஒன்றுக்கு ரூ.800ஆக உயா்த்தித் தரவேண்டும்.
ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு பாலாற்றின் குறுக்கே எத்தனை அணைகள் வேண்டுமானாலும் கட்டலாம் என்று கூறியது இரு மாநில உறவுகளைக் கெடுக்கிறது. 22 அணைகள் கட்டிய பின்பு இனி அணை கட்டினால் பாலாறு பாலைவனமாகும். இதைத் தடுக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக சட்டப்பேரவையில் ஜனநாயக முறைப்படியிலான மரபுகள் கடைப்பிடிக்கப்படவில்லை. மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்களுக்கு சட்டப்பேரவையில் பேச வாய்ப்பு கொடுப்பதில்லை.
தோ்தல் வாக்குறுதியின்படி சட்டப்பேரவையை 100 நாள்கள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ச.ராமதாஸ்.
பேட்டியின்போது, பாமக பொதுச் செயலா் வடிவேல் ராவணன், விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலா் ஜெயராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...