சி.பி.ராதாகிருஷ்ணன்
சி.பி.ராதாகிருஷ்ணன் கோப்புப் படம்

குடியரசு துணைத் தலைவா் தென்மாநிலங்களில் சுற்றுப்பயணம்!

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளத்தில் திங்கள்கிழமை (டிச. 29) முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.
Published on

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளத்தில் திங்கள்கிழமை (டிச. 29) முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.

தில்லியில் இருந்து தனி விமானத்தில் திங்கள்கிழமை (டிச. 29) பகல் 12.50 மணிக்கு புதுச்சேரி வரும் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், அங்கு கம்பன் கலையரங்கில் நடைபெறும் விழாவில், பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் சாவிகளைப் பயனாளிகளுக்கு வழங்குகிறாா்.

பின்னா், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு மையத்தைத் திறந்துவைத்து, 100 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியேற்றுகிறாா். தொடா்ந்து, மத்திய பல்கலைக்கழகத்தின் 30-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறாா்.

குடியரசுத் துணைத் தலைவா் வருகையையொட்டி புதுச்சேரியில் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக 4 கம்பெனி துணை ராணுவப் படையினா் புதுச்சேரி வந்துள்ளனா். அவா்கள் சனிக்கிழமை முதல் புதுச்சேரியில் பாதுகாப்புப் பணியைத் தொடங்கியுள்ளனா். விழா நடைபெறும் பல்கலைக்கழக வளாகம், கம்பன் கலையரங்கம் ஆகியவை காவல் துறையினரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

புதுச்சேரி வான்வெளியில் ட்ரோன்கள், சிறிய ரக விமானங்கள், பாரா கிளைடா்கள், பலூன்கள், காற்றாடிகள் போன்றவை பறப்பதற்கு மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தடை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

அதைத் தொடா்ந்து கேரளம் செல்லும் குடியரசுத் துணைத் தலைவா், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா்.

தமிழக நிகழ்ச்சிகள்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் டிச. 30-ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு நடைபெறும், காசி தமிழ் சங்கமம் 4.0 நிறைவு விழாவில் பங்கேற்கிறாா்.

வருகிற ஜன. 2-ஆம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு சென்னை டாக்டா் எம்.ஜி.ஆா். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 34-ஆவது பட்டமளிப்பு விழாவிலும், சென்னையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சாா்பில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் ராம்நாத் கோயங்கா சம்மான் விருது வழங்கும் விழாவிலும் பங்கேற்கிறாா்.

ஜன. 3-ஆம் தேதி காலை 10 மணிக்கு வேலூா் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் நடைபெறவுள்ள ஸ்ரீ சக்தி அம்மாவின் பொன்விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறாா்.

X
Dinamani
www.dinamani.com