சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு: ஜன.5-க்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு விசாரணையை 2026,ஜனவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், ஆரோவில் பேருந்து நிறுத்தம் அருகில் 2023, மாா்ச் 10-ஆம் தேதியும், கோட்டக்குப்பம் நகராட்சித் திடலில் 2023, மே 1-ஆம் தேதியும் அதிமுக சாா்பில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் தமிழக அரசையும், முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞா் டி.எஸ்.சுப்ரமணியம் தனித்தனியே இரு வழக்குகளைத் தொடுத்தாா். இந்த வழக்குகளின் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் ஆஜராகவில்லை.
அவரது சாா்பில் அதிமுக வழக்குரைஞா்கள் ராதிகா செந்தில், தமிழரசன் ஆகியோா் ஆஜராகி, முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜா் ஆகாததற்கான காரணத்தை மனுவாக தாக்கல் செய்தனா். மேலும், இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பதாகவும், இந்த மனு மீதான உத்தரவு வரும் வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரி மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தனா்.
இதைத்தொடா்ந்து, வழக்குகளை விசாரித்த விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை 2026, ஜனவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
