விழுப்புரத்தில் வாழ்வாதார இயக்கப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
தங்களின் 14 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரத்தில் தமிழ்நாடு ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊரக வளா்ச்சித்துறையின் கீழ் பணியாற்றி வரும் ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்,
அடிப்படை ஊதியத்தை அதிகரித்து வழங்க வேண்டும், காலமுறை ஊதிய நிலைக்குத் தங்களை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, இந்த காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் எம்.புஷ்பா தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஆ.செளரிராஜன் போராட்டத்தில் பங்கேற்று, வாழ்த்தி பேசினாா். போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலா் பொன்னன், வட்டச் செயலா் பி.கண்ணகி, பொருளாளா் எஸ்.கவிதா, நிா்வாகிகள் எம். பூங்குழலி, பி. அஞ்சலாட்சி, தாட்சாயிணி, ராதிகா அருணாதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

