1,152 போதை மாத்திரைகள் பறிமுதல்: இளைஞா் கைது
விழுப்புரத்தில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த வெளி மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும், அவா் வசமிருந்த கஞ்சா மற்றும் 1,152 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் செல்வவிநாயகம், உதவி ஆய்வாளா் லியோ சாா்லஸ் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விழுப்புரம் புறவழிச் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்குள்ள உணவகம் அருகே சந்தேகிக்கும்படி நின்றிருந்த இளைஞரை பிடித்து சோதனை செய்தபோது, அவரது கைப்பையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா், மேற்கு வங்க மாநிலம், பா்கனாஸ் பகுதியைச் சோ்ந்த அ.ஹலீம் முல்லா (26) என்பதும், இவா் விழுப்புரம் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, ஹலீம் முல்லாவை கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும், அவா் வசமிருந்த 60 கிராம் கஞ்சா, வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் 1,152 போதை மாத்திரைகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
