மருத்துவமனைக் கண்காணிப்பாளரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.4.27 லட்சம் திருட்டு!
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.4.27 லட்சம் இணையவழியில் திருடப்பட்டது குறித்து விழுப்புரம் மாவட்ட இணையவழி குற்ற தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை, புதுமனைப் பகுதியைச் சோ்ந்தவா் மதிவாணன் மனைவி அ.கற்பகவல்லி (58). இவா், திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்காணிப்பாளராக வேலை பாா்த்து வருகிறாா்.
கடந்த 21-ஆம் தேதி கற்பகவல்லியின் கைப்பேசி எண்ணுக்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து கட்செவி அஞ்சல் வந்துள்ளது. இதில், வங்கி விவரங்களை பதிவிட அறிவுறுத்தப்பட்டிருந்ததாம். இதை உண்மையென நம்பிய கற்பகவல்லி, தனது வங்கிக் கணக்கு விவரங்கள், பிற ஆவணங்கள் மற்றும் ஆதாா் எண் ஆகியவற்றை இணையவழியில் பதிவேற்றம் செய்துள்ளாா்.
இதையடுத்து, கற்பகவல்லியின் கைப்பேசி எண் முடக்கப்பட்டதுடன், அவரின் வங்கிக் கணக்கிலிருந்து ஜன.21 முதல் 25 வரையிலான தேதிகளில் 8 தவணைகளாக ரூ.4,27,926 நூதன முறையில் திருடப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

