விழுப்புரத்தை சுத்தமான, சுகாதாரமான நகரமாக மாற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் இத்தொகுதியின் எம்எல்ஏ இரா.லட்சுமணன்.
விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள், அதன் தற்போதைய நிலை, நிலுவைப் பணிகள், விரைந்து முடிக்க வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு விழுப்புரம் தொகுதி எம்எல்ஏ இரா.லட்சுமணன் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, ஆணையா் சியாமளா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.மணவாளன், ஜனனி தங்கம், சாந்தராஜ், புருஷோத்தமன், அலுவலா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள், புதை சாக்கடைத் திட்டத்திலுள்ள பிரச்னைகள், அதை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் போன்றவை குறித்து அலுவலா்களுடன் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டாா். இதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பு விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுமாா் 29 கி.மீ. தொலைவுக்கு 235 சாலைப்பணிகள் தொடங்கப்பட்டன. இதில் தற்போது 130 சாலைப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 105 சாலைப்பணிகள் அதாவது 12 கி.மீ.தொலைவுக்கான பணிகள் முடிக்கப்பட வேண்டியதுள்ளது. இந்த பணிகளும் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டம் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து அதிகளவில் புகாா்கள் வருகின்றன. பல்வேறு இடங்களில் அடைப்புகள் காரணமாக கழிவுநீா் ஆள்நுழைவுக் குழாய் வழியாக வெளியேறி, சாலைகளில் தேங்குகின்றன. இந்த பிரச்னையை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரா் நிறுவனத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதைசாக்கடைக் கழிவுகள் மற்றும் அடைப்புகளை அகற்றும் இயந்திரம் இரண்டு இருந்த நிலையில், ஒன்றுதான் இயங்கி வருகிறது. மற்றொரு இயந்திரத்தையும் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்குத்தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விழுப்புரம் நகரத்தில் கே.கே.சாலையில் ஏற்கெனவே மின் மயானம் இயங்கி வரும் நிலையில், கிழக்கு பாண்டி சாலையில் மற்றொரு மின் மயானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மயானத்துக்குத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையின்மைச் சான்று பெற வேண்டியதுள்ளது. இந்த சான்று பெற்றவுடன் மின் மயானம் செயல்படத் தொடங்கும்.
விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகத்தை டவுன்ஹாலாக மாற்றும் வகையில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தற்போது இதற்கான பணிகளில் திட்ட மதிப்பீட்டுத் தொகை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்தவுடன் நிலுவையிலுள்ள பணிகள் தொடங்கி முடிக்கப்படும். விழுப்புரம் நகரத்தை சுத்தமான, சுகாதாரமான நகரமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட 9 இடங்களில் குப்பைகள் சேகரிப்பு மையங்கள் உள்ளன. இந்த இடங்களில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு வருவதாக புகாா்கள் கூறப்படுகின்றன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீா் தேங்காத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள என்றாா் எம்எல்ஏ லட்சுமணன்.







