மழைநீர் தேங்கிய பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு

கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27 -ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
இந்தப் பகுதிகளில் தண்ணீரை வடிய வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கடலூர் அருகே உள்ள குண்டுஉப்பலவாடி ஊராட்சிக்கு உள்பட்ட நகர்ப் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பத்மாவதி நகரில் மழைநீரை  வெளியேற்றுவதற்கு அமைக்கப்பட்டுள்ள வடிகால் வாய்க்காலைப்   பார்வையிட்டார். அந்தப் பகுதியில் ஆங்காங்கே தேங்கியுள்ள மழைநீர் வெளியேறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள வடிகால் வாய்க்கால்களைச் சுத்தம் செய்வதோடு, அவற்றை அகலப்படுத்தியும், தங்கு தடையின்றி மழைநீர் வெளியேறுவதற்கு வழிவகை செய்யவும் ஆட்சியர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, நகராட்சிக்கு உள்பட்ட விபிஆர் நகரில் வடிகால் வாய்க்காலைப் பார்வையிட்டு, மழைநீர் தங்கு தடையின்றி வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
பின்னர், பாதிரிக்குப்பம் ஊராட்சி கூத்தப்பாக்கம் நாதன்நாயகி நகர், காரைக்காடு புதுக்காலனி உள்ளிட்ட பகுதிகளையும் பார்வையிட்டு, அங்கு மழைநீர் வடிவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
சார் - ஆட்சியர் ஜானிடாம் வர்க்கீஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பெ.ஆனந்த்ராஜ், கடலூர் நகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான், ஊரக வளர்ச்சி முகமைப் பொறியாளர்கள் கல்யாணசுந்தரம், விஜயராகவன், வட்டாட்சியர் ப.பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அ.குர்ஷித் பேகம், சாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com