விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் மணல் குவாரியைத் திறக்க வலியுறுத்தி, மாட்டு வண்டித் தொழிலாளர்கள் புதன்கிழமை முட்டிக்கால் போட்டு வந்து கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
விருத்தாசலம் வழியாகப் பாயும் மணிமுக்தா ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கான குவாரிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்தக் குவாரிகள் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அண்மையில் மூடப்பட்டன. இதனால், இந்தக் குவாரிகளில் இருந்து மணல் அள்ளி பிழைப்பு நடத்தி வந்த மாட்டு வண்டித் தொழிலாளர்களுக்கு மணல் அள்ள முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டனர்.
இதனால், பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறனர். மேலும், மணிமுக்தா ஆற்றில் மாட்டு வண்டித் தொழிலாளர்களுக்கென தனியாக குவாரியைத் திறந்து அதன் மூலம் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து பலமுறை மனு அளித்தனர்.
இருப்பினும், இவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டன. இதனால் விரக்தியடைந்த மாட்டு வண்டித் தொழிலாளர்கள் புதன்கிழமை விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். பின்னர், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, அலுவலக நுழைவாயிலில் இருந்து முட்டிக்கால் போட்டபடி சென்று, கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா, இதுகுறித்து ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து, அவர்கள் கலைந்துச் சென்றனர்.