

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இக்கோயில் கோபுரங்கள், நந்திகள், கொடி மரங்கள், தீர்த்தங்கள், பிரகாரம் என ஒவ்வொன்றும் 5-ஆக அமைந்துள்ளது சிறப்பு. நிகழாண்டு மாசி மகம் திருவிழாவையொட்டி கிராம தேவதைகளுக்கு உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து பிப்.25-ஆம் தேதி மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதுமுதல் தினந்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக 2-ஆம் தேதி விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடந்தேறியது.
மாசி மக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதிகாலை பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த 5 திருத்தேர்களில் பின்னர் ஏற்கனவே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த 5 தேர்களிலும், ஆழத்து விநாயகர், சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். முதலில் ஆழத்து விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர் என ஒன்றன் பின் ஒன்றாக குறிப்பிட்ட கால இடைவெளியில் புறப்பட்டது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் கூறி சிறப்பு பூஜைகள் நடத்தி தேரோட்டத்தை தொடக்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த தேரானது சன்னதி வீதி, தென் கோட்டை வீதி, மேற்கு கோட்டை வீதி, வட கோட்டை வீதி வழியாக மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தில் விருத்தாசலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.
மேலும் 108 ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மக தீர்த்த வாரி மணிமுத்தா ஆற்றில் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. தீர்த்தவாரியில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள்வர். அன்றைய தினம் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தெப்ப உற்சவமும், மறுநாள் சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.