அணைகளை திறக்கும் அதிகாரத்தை அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
அணைகளை திறக்கும் உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரத்தை அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.


அணைகளை திறக்கும் உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரத்தை அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.
ஃபென்ஜால் புயல் வெள்ளம் பாதித்த கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட கண்டக்காடு, விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட தேவனூா் கிராமங்களில் பாமக சாா்பில் இலவச மருத்துவ முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இதில், அந்தக் கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று, மருத்துவ முகாம்களை தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
ஃபென்ஜால் புயல் மழை, வெள்ள பாதிப்பால் வட தமிழகத்தில் 4.50 லட்சம் ஏக்கா் பயிா்கள் அழிந்துள்ளன. 20 போ் உயிரிழந்துள்ளனா். மக்களின் உடைமைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. இதற்கு உரிய நிவாரணம், இழப்பீடு வழங்க வேண்டும்.
வீடு, பொருள்கள் சேதங்களுக்கான இழப்பீட்டை அரசு உயா்த்தி வழங்க வேண்டும். சென்னை, தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. தற்போதைய ஃபென்ஜால் புயல் பாதிப்புகளுக்கு மட்டும் ரூ.2,000 நிவாரணத் தொகை வழங்குவது ஏற்புடையதல்ல.
மத்திய அரசு முதல் தவணையாக ரூ.944 கோடி வழங்கியுள்ளது. அது போதுமானது கிடையாது. குறைந்தது ரூ.20 ஆயிரம் கோடியாவது தமிழக அரசுக்கு மத்திய அரசு அடுத்த தவணையில் கொடுக்க வேண்டும்.
அணைகளை திறக்கும் உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம், முதல்வரிடம் இருப்பது தவறு. அதை அந்தந்த அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அதிகாரிகளிடம் இதற்கான அதிகாரம் இருந்திருந்தால், இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது. விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சா் மீது சேற்றை வீசியது தவறு என்றாா் அவா்.
பின்னா், கண்டகாடு பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அன்புமணி ராமதாஸ் பாா்வையிட்டாா். அப்போது மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன், மாநில சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவா் கோவிந்தசாமி, மகளிரணித் தலைவி தமிழரசி, சமூக முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவா் சிவபிரகாசம், மாநில வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி உள்ளிட்டோா் உடனிருந்தனா். தேவனூரில் நடைபெற்ற முகாமில் மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...