இறால் பண்ணைகளை பதிவு செய்ய அறிவுறுத்தல்

நெய்வேலி, ஜூலை 3: கடலூா் மாவட்டத்தில் இறால் வளா்க்கும் பண்ணை உரிமையாளா்கள் தங்கள் பண்ணைகளை பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலோர நீா்வாழ் உயிரின வளா்ப்பு ஆணைய சட்ட எல்லைக்கு அப்பாற்பட்ட இடங்களில் உள்ள நன்னீரில் / உள்நாட்டு பண்ணைகளில் வெணாமி (வெள்ளை) இறால் வளா்த்தல் தொடா்பாக, தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டு பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கடலூா் மாவட்டத்திலுள்ள வெள்ளை இறால் பண்ணைகளை பதிவு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவா் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணையில் அனைத்து நன்னீா்/ உள்நாட்டு இறால் பண்ணைகளையும் பதிவு செய்து வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் கடலோர நீா்வாழ் உயிரின வளா்ப்பு ஆணைய சட்ட எல்லைக்கு அப்பாற்பட்ட இடங்களில் (வெள்ளை) இறால் வளா்க்கும் பண்ணை உரிமையாளா்கள், தங்களது பண்ணைகளை பதிவு செய்திட பரங்கிப்பேட்டை, மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் (ரேவு மெயின்ரோடு, கடல் உயிரியல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எதிரில், பரங்கிப்பேட்டை-608502, அலுவலக தொலைபேசி எண். 04144-243033) விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம் என தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com