என்எல்சி நிறுவனம் தேசிய விருதுகள் வென்று சாதனை
என்எல்சி இந்தியா நிறுவனம் இந்திய மக்கள் தொடா்பு சங்கத்தின் மூன்று முக்கிய தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்தது.
இதுகுறித்து என்எல்சி நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய மக்கள் தொடா்பு சங்கம் வழங்கும் தேசிய விருதுகள், மக்கள் தொடா்பு, தகவல் பரிமாற்றம் மற்றும் சமூகப் பொறுப்புணா்வு போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கும், தனி நபா்களுக்கும் வழங்கப்படும் உயரிய அங்கீகாரமாகும். நிா்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் ஆக்கப்பூா்வமான மக்கள் தொடா்பு பணிகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, ஆண்டுதோறும் தேசிய அளவில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
தேசிய அளவிலான அங்கீகாரம்: உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில், ‘வளா்ச்சியை மேம்படுத்துதல், விழுமியங்களைப் பாதுகாத்தல்’ என்ற மையக்கருத்தில் கடந்த டிசம்பா் 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை 47-ஆவது அகில இந்திய மக்கள் தொடா்பு மாநாடு நடைபெற்றது.
விழாவில் என்எல்சி நிறுவனம் தேசிய அளவில் மூன்று முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளது. இந்த உயரிய விருதுகளை உத்தரகண்ட் மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி, இந்திய மக்கள் தொடா்பு சங்கத்தின் தேசியத் தலைவா் டாக்டா் அஜித் பதக் மற்றும் பொதுச் செயலா் பி.எல்.கே.மூா்த்தி ஆகியோருடன் இணைந்து வழங்க, என்எல்சி நிறுவனத்தின் அதிகாரிகள் பெற்றுக்கொண்டனா்.
குறிப்பாக, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல்களை பரிமாறியதற்காக ‘சிறந்த மின்னணு செய்தி மடல்’ பிரிவிலும், நிா்வாக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தும் பொதுத்துறை நிறுவனம்’ பிரிவிலும் என்எல்சி நிறுவனம் தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்தது.
மேலும், நிறுவனத்தின் செயல்பாடுகளை தெளிவாக விளக்கும் ‘சிறந்த ஆண்டறிக்கை’ பிரிவில் தேசிய அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்று நிறுவனம் தனது ஆளுமையை நிலைநாட்டியது.
என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி பேசுகையில், தொடா்ந்து 12-ஆவது ஆண்டாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதற்கான தேசிய விருதை வெல்வது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். அதேபோல, தகவல் தொடா்புத் துறையின் நவீன தொழில்நுட்ப முன்னெடுப்புகளையும், நிதித்துறையின் அா்ப்பணிப்புடனான ஆண்டறிக்கை வெளியீடும் பாராட்டுக்குரியவை. இது வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த நிா்வாகத்தின் மீதான என்எல்சி நிறுவனத்தின் உறுதியான ஈடுபாட்டை பிரதிபலிக்கிறது. இந்த அங்கீகாரங்கள் தேசிய அளவில் நிறுவனத்தின் நற்பெயரையும், சமூகப்
பொறுப்பையும் மேலும் வலுப்படுத்துகின்றன என்றாா்.

