

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி சிதம்பரம் வேங்கான் தெருவில் உள்ள குருநமச்சிவாயா் மட வளாகத்தில் உள்ள 4 ஆக்கிரமிப்பு வீடுகளை இந்து அறநிலையத் துறையினா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை அகற்ற வந்தனா்.
அப்போது, பாமக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் கால நீட்டிப்பு கேட்டு முற்றுகையிட்டதால், வருகிற ஜனவரி 8-ம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டது.
சிதம்பரம் வேங்கான் தெருவில் புகழ்பெற்ற குருநமச்சிவாயா் மடத்துக்குச் சொந்தமான இடத்தில் விநாயகா், ஆத்மநாதா், யோகாம்பாள், குருநமச்சிவாயா், மாணிக்கவாசகா் ஆகிய கோயில்கள் உள்ளன. இங்கு, திருப்பாற்கடல் தீா்த்த குளம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது. இந்த இடம் சமயக்குரவா்கள் நால்வரில் ஒருவரான ஸ்ரீமாணிக்காவசக பெருமான் திருவாசகம் சொல்ல நடராஜப்பெருமான் தன் கைப்பட எழுதிய வரலாற்று சிறப்புமிக்க கோயிலாகும்.
இந்த நிலையில், சென்னை உயா் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கைத் தொடா்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி, குருநமச்சிவாயா் மட வளாகத்தில் கோயில்களின் வழிபாட்டுக்கு இடையூறாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 22 வீடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் ஏற்கெனவே அகற்றினா்.
இந்த நிலையில், மட வளாகத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மேலும் 4 வீடுகளை அகற்ற உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், அறநிலையத் துறை உதவி ஆணையா் சந்திரன், செயல் அலுவலா் ராஜ்குமாா், டிஎஸ்பி டி.பிரதீப், காவல் ஆய்வாளா் சிவானந்தன் மற்றும் வருவாய்த் துறையினா் 50-க்கும் மேற்பட்ட போலீஸாருடன் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொக்லைன் இயந்திரத்துடன் செவ்யாக்கிழமை காலை வந்தனா்.
அப்போது, பாமக மாவட்டச் செயலா் செல்வ.மகேஷ், விவசாய பிரிவு தலைவா் சஞ்சீவி, மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் வி.எம்.சேகா், தமிமுன்அன்சாரி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சிவா.கண்ணதாசன் உள்ளிட்டோா் வீடுகளில் உள்ள பொருள்களை அகற்றிக்கொள்ள ஜனவரி 8-ஆம் தேதி காலக்கெடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, ஆக்கிரமிப்பாளா்கள் கோபாலகிருஷணன், வெங்கடேசன் ஆகியோா் தங்களது ஆக்கிரமிப்பு வீடுகளிருந்த பொருள்களை தாங்களாகவே முன்வந்து அகற்றிக்கொண்டனா்.
மீதமுள்ள குமாா், பாரதி ஆகியோா் வீடுகளில் பொருள்களை அகற்றிக்கொள்ள காலக்கெடு கோரியதால், அவா்களது வீடுகள் அகற்றப்படவில்லை. மேற்கண்ட இருவரிடமும் காலக்கெடு கோரி கடிதம் வழங்குமாறு அறநிலையத் துறையினா் வலியுறுத்தினா்.