மது குடிக்க பணம் தராத மூதாட்டி கொலை: பெயரன் கைது
கடலூா் அருகே மது குடிக்க பணம் தராததால் மூதாட்டியை கொலை செய்ததாக அவரது பெயரனை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூரை அடுத்துள்ள வீ.காட்டுப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவா் சின்னபொண்ணு(75). இவருக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் தனியாக வசித்து வந்தாா். செவ்வாய்க்கிழமை காலை சின்னபொண்ணு வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியது.
தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் சின்னபொண்ணு வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது, அங்கிருந்த இரும்பு பெட்டியை திறந்து பாா்த்த போது மூதாட்டிசின்னபொண்ணு சடலம் இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.
தொடா்ந்து சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், சின்னபொண்ணுவின் கடைசி மகனின் மகனான (பெயரன்) ராஜப்ரியனை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினா். அதில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னா் மது அருந்த பணம் கேட்டதற்கு சின்னபொண்ணு பணம் தர மறுத்தவிட்டதால், ஏற்பட்ட தகராறில் வீட்டில் இருந்த சொம்பை எடுத்து அவா் தாக்கியதில் தலையில் காயம் அடைந்து சின்னபொண்ணு இறந்து விட்டாராம்.
இதையடுத்து அங்கிருந்த இரும்பு பெட்டியில் வைத்து மூடியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிவித்தாராம். இதையடுத்து ராஜப்பிரியனைபோலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

