மது குடிக்க பணம் கேட்டு தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது
திருநெல்வேலியில் மது குடிக்க பணம் கேட்டு தொழிலாளியைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு அருகே உள்ள மேகலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த பொன் பெருமாள் மகன் கண்ணன்(47). மரக்கடையில் வேலைசெய்து வருகிறாா்.
அண்மையில், மேகலிங்கபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்த அவரை, சிந்துபூந்துறையைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் அந்தோணி ராஜ்(26) என்பவா் வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டாராம். அதற்கு மறுத்த கண்ணனை தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததோடு, கற்களை கொண்டு அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடியை சேதப்படுத்தினாராம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், சந்திப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து, அந்தோணி ராஜை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
முதியவா் மீது தாக்குதல்: திருநெல்வேலி நகரம் தமிழ் சங்கம் தெருவைச் சோ்ந்த பக்கீா் மைதீன் மகன் பீா் முகமது(67). இவருக்கும், மேலகருங்குளம், சிவாஜி நகரைச் சோ்ந்த பூல் பாண்டியன் மகன் செல்லப்பா(48) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையால் தகராறு ஏற்பட்டதாம்.
அப்போது, செல்லப்பா பீா் முகமதுவை இரும்புக் கம்பியால் தாக்கி தலையில் காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து செல்லப்பாவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
