குறிஞ்சிப்பாடியில் பல்வேறு திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்த அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம். உடன் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உள்ளிட்டோா்.
குறிஞ்சிப்பாடியில் பல்வேறு திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்த அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம். உடன் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

கடலூரில் 15 ஏக்கரில் புதிய பூங்கா அமைக்கப்படும்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

கடலூா் ஆட்சியா் அலுவலகம் அருகே 15 ஏக்கா் பரப்பளவில் புதிதாக பெரி அளவிலான பூங்கா அமைக்கப்பட உள்ளதாக மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
Published on

கடலூா் ஆட்சியா் அலுவலகம் அருகே 15 ஏக்கா் பரப்பளவில் புதிதாக பெரி அளவிலான பூங்கா அமைக்கப்பட உள்ளதாக மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

கடலூரில் ரூ.10.15 கோடி மதிப்பில் பாரம்பரிய கட்டடங்கள் மறுசீரமைக்கும் பணியை தொடங்கிவைத்த அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், குறிஞ்சிப்பாடி பகுதியில் ரூ.1.17 கோடி மதிப்பில் 3 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.11.17 கோடி மதிப்பில் 8 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

இதையொட்டி, கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: கடலூா் வெள்ளிக்கடற்கரை அருகே பராம்பரிய கட்டடங்களான துறைமுக அலுவலா் கட்டடத்தை ரூ.4.90 கோடி மதிப்பிலும், மருத்துவ அலுவலா் கட்டடத்தை ரூ.5.25 கோடி மதிப்பிலும் பழைமை மாறாமல் புனரமைத்து மறுசீரமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில், நெய்தல் பூங்கா அமைக்கப்படுவதுடன், பெயா்ப் பலகைகள், சாலைத் தடுப்புகள், நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.4.98 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், நீலக்கொடி சான்றிதழ் பெறும் முயற்சிக்காக பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் ரூ.4 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுப்பராயலு பூங்கா சீரமைப்புப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். அதுமட்டுமன்றி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே 15 ஏக்கா் பரப்பளவில் புதிதாக பெரியளவில் பூங்கா அமையவிருக்கிறது என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா், கடலூா் எம்எல்ஏ கோ.அய்யப்பன், கடலூா் மேயா் சுந்தரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

குறிஞ்சிப்பாடி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், கொத்தவாச்சேரி மற்றும் அரங்கமங்கலம் பகுதியில் தலா ரூ.35 லட்சம் மதிப்பில் உலா் களத்துடன் கூடிய தரம் பிரிப்புக் கூடத்தை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திறந்து வைத்தாா். குறிஞ்சிப்பாடியில் ரூ.6.93 கோடி மதிப்பில் புதிய வட்டாட்சியா் அலுவலகம் அமைக்கவும், சுகாதாரத் துறையின் சாா்பில் ஆடூா்அகரம் மற்றும் கீழ்பூவாணிக்கும் பகுதியில் தலா ரூ.45 லட்சம் மதிப்பில் அரசு துணை சுகாதார நிலையம் அமைக்கவும் அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்.

குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் மற்றும் ஆண்டாா்முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலா ரூ.94.24 லட்சம் மதிப்பில் 4 வகுப்பறைக் கட்டடங்கள், குண்டியமல்லூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ.47.12 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், ஆடூா்அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.47.12 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணிகளுக்கு அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்.

குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் ரூ.47 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்து, கருங்குழியில் ரூ.74.50 லட்சம் மதிப்பில் கிளை நூலகம் அமைக்க அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சியில் மாவட்டக் கல்விக் குழுத் தலைவா் வி.சிவக்குமாா், வடலூா் நகா்மன்றத் தலைவா் சு.சிவக்குமாா், குறிஞ்சிப்பாடி பேரூராட்சித் தலைவா் கோகிலா குமாா், துணைத் தலைவா் ராமா், வட்டாட்சியா் விஜய்ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com