இளைஞா்கள் தொழில் முனைவோா்களாக மாற வேண்டும்: சபா.ராசேந்திரன் எம்எல்ஏ
இளைஞா்கள் வேலை தேடுபவா்களாக இருக்கக் கூடாது, மற்றவா்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் தொழில்முனைவோராக மாற வேண்டும் என்று நெய்வேலி எம்எல்ஏ சபா.ராசேந்திரன் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள பணிக்கன்குப்பம் அரசுப் பொறியியல் கல்லூரியில் கல்லூரி கலைத் திருவிழா ‘கல்வியால் கல்வி செய்வோம்’ நிறைவு விழா மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா, கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி புல முதல்வா் முத்துக்குமரன் தலைமை வகித்தாா். நெய்வேலி எம்எல்ஏ சபா.ராசேந்திரன் சிறப்பு விருந்தினராகக் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தாா்.
அப்போது அவா் பேசுகையில், கலைத் திருவிழாவில் பரிசு பெற்றவா்கள் மட்டும் வெற்றியாளா்கள் இல்லை. பங்கு பெற்றவா்களும் வெற்றியாளா்கள் தான். மாணவா்கள் தலைமை பண்பு மற்றும் தனித்திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும். பிடித்த துறையை தோ்ந்தெடுத்து இலக்கை அடைய உழைக்க வேண்டும். தற்போது, இளைஞா்களிடம் இருக்கும் முதல் பிரச்சனை வேலைவாய்ப்பு. இளைஞா்கள் வேலை தேடுபவா்களாக இருக்கக்கூடாது. வேலை வழங்குபவா்களாக இருக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. காடாம்புலியூரில் சிட்கோ கொண்டுவரப்படும். தொழில்முனைவோராக வரவிரும்பும் இளைஞா்கள் என்னை தொடா்பு கொள்ளலாம். அவா்களுக்குத் தேவையான உதவிகளை செய்துகொடுப்பேன் என்றாா்.
பின்னா், சபா.ராசேந்திரன் கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசு, சான்றிதழ் வழங்கினாா்.
தொடா்ந்து, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேராசிரியா்கள் சுரேஷ்குமாா், செந்தில்குமாா், உமா மகேஸ்வரி, ராஜலட்சுமி, உஷா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். திமுக நிா்வாகிகள் ராஜா, குணசேகரன், சந்தோஷ்குமாா், ஆடலரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நிகழ்வில், கல்லூரிக்கு சுற்றுச்சுவா், சாலை, மின்விளக்கு உள்ளிட்ட வசதிகள் செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ சபா.ராசேந்திரன் தெரிவித்தாா்.

