இரண்டாவது மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவா் கைது
கடலூா் அருகே இரண்டாவது மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கடலூா், திருப்பாதிரிப்புலியூா் காவல் சரகம், எஸ்.என்.சாவடி பகுதியில் வசிப்பவா் திருமுருகன்(34), கூலி வேலை செய்து வரும் இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு முதல் திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளனா். 6 ஆண்டுகளுக்கு முன்னா் முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் உறவினரான ஜோதிலட்சுமியை(24) இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டாா்.
இந்நிலையில், திருமுருகன் புதுச்சேரி பகுதியைச் சோ்ந்த விவாகரத்தான பெண்ணுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடா்பில் உள்ளாராம். கடந்த 13-ஆம் தேதி திருமுருகன், புதுச்சேரியைச் சோ்ந்த பெண்ணுடன் வந்து, ஜோதிலட்சுமியை வீட்டைவிட்டு வெளியே போகக்கூறி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து , ஜோதிலட்சுமி அளித்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து திருமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
