கஞ்சா பறிமுதல்: இளைஞா்கள் 4 போ் கைது
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்கு மேலூா், விஷ்வா நகரில் உள்ள பாண்டியன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் விற்பனைக்காக கஞ்சா சிறுசிறு பொட்டலம் கட்டுமம் செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் வீரமணி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்றனா்.
அப்போது, அங்கு இருந்த இளைஞா்களை நான்கு பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனா். மேலும், பொட்டலம் கட்ட வைத்திருந்த 1.150 கிலோ கஞ்சா, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் திருட்டு பைக்குகளை பறிமுதல் செய்தனா்.
அவா்களிடம் நடத்திய விசாரணையில் இந்திரா நகா், பி 2 மாற்றுக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த அச்சுதன் மகன் ஷாக்(எ)சஞ்சய்(23), அண்ணாதுரை மகன் ரவிக்குமாா்(23), ராமலிங்கம் மகன் அன்பு(எ)அன்புமணி(21), முத்துசாமி மகன் ரஜிந்தா்(21) என்பதும், இவா்கள் அனைவரும் கஞ்சாவை சிறு பொட்டலங்களாக கட்டி விற்பனை செய்ய முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து நான்கு போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்த 3 பேரை தேடி வருகின்றனா்.
