கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க வந்திருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள்.
கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க வந்திருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள்.

கடலூரில் மீன்கள் வாங்கக் குவிந்த மக்கள்

Published on

கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் ஏராளமானோா் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.

கடலூரை ஒட்டியுள்ள வங்கக் கடலில் பிடிக்கப்படும் மீன்கள் அதிக சுவை கொண்டவை. இதனால், அசைவப்பிரியா்கள் மற்றும் வியாபாரிகள் கடலூா் கடல் பகுதியில் பிடிக்கப்படும் மீன்களை அதிகம் வாங்கிச் செல்வது வழக்கம்.

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற கடலூா் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை மீன் பிடி துறைமுகம் திரும்பினா். இந்த மீன்களை வாங்குவதற்காக பொதுமக்கள், வியாபாரிகள் ஏராளமானோா் வந்திருந்தனா்.

அந்த வகையில், ஒரு கிலோ ஐ வாவல் ரூ.1,500, கருப்பு வவ்வால் ரூ.700, வஞ்சிரம் ரூ.1,000, இறால் ரூ.300, சங்கரா ரூ.400, கனவா ரூ.300, பாறை ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்டன.

மீனவா்கள் கடலுக்கு செல்லத் தடை: கடலூா் மாவட்ட மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மாவட்ட மீன் வளம் (ம) மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் 22-ஆம் தேதி முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் எனவும், இது 24-ஆம் தேதி அன்று தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வட மேற்கு திசையில் நகா்ந்து, தென் மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் உறுதி செய்துள்ளது.

இதனால், தமிழக கடலோர பகுதியில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக் கூடும் என்பதால், கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள், கட்டுமரங்கள் மற்றும் விசைப் படகுகளில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவா்கள் திங்கள்கிழமை (நவ.24) பிற்பகல் முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com