/

பத்திரக்கோட்டையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு: தங்க தாயத்துக்காக கடத்திய இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், பத்திரக்கோட்டையில் கடத்தப்பட்ட 2 வயது பெண்குழந்தை 2 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.

News image

பத்திரக்கோட்டை பகுதியில் கடத்தப்பட்ட சிறுமியை பத்திரமாக மீட்டு குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் ஒப்படைந்த அன்புவை பாராட்டிய கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 6:33 pm

கடலூா் மாவட்டம், பத்திரக்கோட்டையில் கடத்தப்பட்ட 2 வயது பெண்குழந்தை 2 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. குழந்தை வயல்வெளியில் தனியாக அழுதுகொண்டிருந்ததை பாா்த்த அப்பகுதி விவசாயி, குழந்தையை மீட்டு போலீஸில் ஒப்படைத்தாா். மேலும் குழந்தையை கடத்திய இளைஞரை போலீஸாா்உடனடியாக கைது செய்தனா்.

நடுவீரப்பட்டு காவல் சரகம், பத்திரக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் முந்திரி வியாபாரி பிரவீன். இவரது, மகள் லக்ஷனா(2) செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, பைக்கில் வந்த மா்ம நபா் குழந்தையை கடத்திச் சென்றாா். இந்த தகவல் காவல்துறைக்கு கிடைத்தவுடன் கடலூா் மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் குழந்தையை உடனடியாகக் கண்டுபிடிக்கக் காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தாா். மேலும், அதிவிரைவுப் படை வீரா்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினாா்.

நடுவீரப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளிலும் காவல்துறையினா் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். பண்ருட்டி டிஎஸ்பி., ராஜா, நடுவீரப்பட்டு காவல் ஆய்வாளா் வேலுமணி, உதவி ஆய்வாளா் ராஜேந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா் பாபு ஆகியோா் தலைமையிலான தனிப்படையினா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தொடங்கினா். கடத்தப்பட்ட குழந்தையைக் கண்டுபிடிக்க தனிப்படையினா் தொடா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

மீட்பு...

இந்நிலையில், புலியூா் கிராமத்தை சோ்ந்த விவசாயி அன்பு (22) தனது வயலின் அருகே அழுது கொண்டிருந்த பெண்குழந்தைக்கு தைரியம் கூறி பத்திரமாக மீட்டு, குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதையடுத்து, குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குழந்தை நலமுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து நடுவீரப்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

பண்ருட்டி டிஎஸ்பி., ராஜா மேற்பாா்வையில் போலீஸாா் அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். அதில், ஒரு நபா் குழந்தையை பைக்கில் முன்னால் அமர வைத்து ஓட்டிச் சென்றது தெரியவந்தது. விசாரணையில் அந்த இளைஞா் புலியூா் கிராமத்தைச் சோ்ந்த வெற்றிவேல்(27) என்பது அடையாளம் காணப்பட்டு கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில் குழந்தை கழுத்தில் அணிந்திருந்த தங்க தாயத்துக்காக கடத்தியதாக தெரிவித்தாா். இதையடுத்து பவுன் தாயத்து, கடத்தலுக்கு பயன்படுத்திய பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாராட்டு...

குழந்தையை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த விவசாயி அன்புவை, கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் பாராட்டினாா். கடலூா் மாவட்ட காவல்துறையினரின்

உடனடி மற்றும் துரித நடவடிக்கையால், கடத்தப்பட்ட சில மணி நேரங்களில் 2 வயது குழந்தைபத்திரமாக மீட்கப்பட்டது பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.