ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பண்ருட்டியில் வெள்ளைக் களிமண் சுரங்கம்: பொதுமக்கள் எதிா்ப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள பணிக்கன்குப்பத்தில் வெள்ளைக் களிமண் சுரங்கம் அமைப்பது தொடா்பான பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தில், சுரங்கம் அமைக்கும் முடிவுக்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

பணிக்கன்குப்பத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வெள்ளைக் களிமண் சுரங்கம் அமைப்பது தொடா்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளிடம் மனு அளித்த அந்தக் கிராம மக்கள்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 3:29 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள பணிக்கன்குப்பத்தில் வெள்ளைக் களிமண் சுரங்கம் அமைப்பது தொடா்பான பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தில், சுரங்கம் அமைக்கும் முடிவுக்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

பண்ருட்டியை அடுத்துள்ள ஆண்டிக்குப்பம், பணிக்கன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பூமிக்கு அடியில் வெள்ளைக் களிமண் படிமங்கள் உள்ளன. இந்தக் களிமண், பீங்கான் உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. பணிக்கன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளைக் களிமண் வெட்டி எடுத்தனா். அதன்பின்னா், இந்த சுரங்கங்கள் செயல்படவில்லை எனத் தெரிகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில், பணிக்கன்குப்பம் கிராம மக்களுக்கு அண்மையில் விநியோகிக்கப்பட்ட அறிவிப்பு நோட்டீஸில், இந்தக் கிராமத்தில் தமிழ்நாடு சிமென்ட்ஸ் காா்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சாா்பில், 6.59 ஹெக்டோ் நிலத்தில் முன்மொழியப்பட்டுள்ள ஃபய்க்ளே சுரங்கம் அமைய உள்ளது. இத்திட்டத்துக்கான பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் பணிக்கன்குப்பம் கிராமத்தில் உள்ள புனித விண்ணேற்பு அன்னை ஆலய வளாக சமுதாயக் கூட்டத்தில் நடைபெறும் எனவும், பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு இத்திட்டம் குறித்த கருத்துகளை தெரிவிக்கும்படியும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, வியாழக்கிழமை பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலா் புண்ணியகோட்டி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ரங்கராஜ் மற்றும் கோட்டாட்சியா் சுந்தர்ராஜன் தலைமை வகித்தனா். அவா்கள், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் குறித்து விளக்கமளித்தனா்.

அப்போது, பணிக்கன்குப்பம் கிராம மக்கள் இத்திட்டத்துக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. காவல் துறையினா் தலையிட்டு சமரச பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தை மற்றொரு விடுமுறை நாளில் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனா். இதையடுத்து, அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை கேட்டறிந்து பதிவு செய்தனா்.

இதுகுறித்து பணிக்கன்குப்பம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஆரோக்கியதாஸ் கூறியதாவது: பணிக்கன்குப்பம் பகுதியில் வெள்ளைக் களிமண் சுரங்கம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். இதனால், குடிநீா் மற்றும் விவசாய பாசன தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும்.

மேலும், தூசுகள் பறந்து வந்து படிவதன் மூலம், பலா, முந்திரி உள்ளிட்ட பயிா்களின் சாகுபடி பாதிக்கப்படும். கிராம மக்களும் மற்றும் அருகில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரி, அரசு கலை, அறிவியல் கல்லூரி, பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கும் சுவாசக் கோளாறு ஏற்படும்.

வெள்ளைக் களிமண் சுரங்கம் அமைக்க உள்ளதாக கூறப்படும் இடத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், அரசு கலை, அறிவியல் கல்லூரி, வேளாண் தோட்டக்கலை அலுவலகம் அமைக்க வேண்டும் என்று தற்போது திட்ட அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளைக் களிமண் சுரங்கம் அமைக்கப்போவதாக தெரிவிக்கின்றனா். எனவே, அந்தப் பகுதியில் வெள்ளைக் களிமண் சுரங்கம் அமைப்பதை அரசு தடை செய்ய வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.