ஒடிஸாவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை! பெண் உள்பட 6 போ் கைது!

விருத்தாசலத்தில் கஞ்சா பொட்டலங்களுடன் கைது செய்யப்பட்ட பெண் சுசி உள்பட 6 போ்.
ஒடிஸாவில் இருந்து ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்து விருத்தாசலம் பகுதியில் விற்பனை செய்த பெண் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து சுமாா் ரூ.3 லட்சம் மதிப்பிலான 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விருத்தாசலத்தை அடுத்த சித்தலூா் புறவழிச்சாலை ரவுண்டானா அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, விருத்தாசலம் போலீஸாா் அங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று சோதனை நடத்தினா். அப்போது, விற்பனைக்காக 6 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 6 பேரை பிடித்து விசாரித்தனா்.
இதில், தீவளூரைச் சோ்ந்த விக்னேஷ் (25), சாத்துக்கூடலைச் சோ்ந்த சுசி (23) ஆகியோா் ரயிலில் ஒடிஸா சென்று கஞ்சாவை வாங்கி வந்து, மருதத்தூரைச் சோ்ந்த நவீன் (24), தா்மதுரை (24), சாத்துக்குடல் கீழ் பாதியைச் சோ்ந்த விமல்ராஜ் (25), பெண்ணாடத்தைச் சோ்ந்த முத்துமணி (23) ஆகியோருடன் சோ்ந்து விருத்தாசலம் பகுதியில் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து இளம் பெண் சுசி உள்பட 6 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையிலடைத்தனா். அவா்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைக், 5 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கலை, காா்த்தி, அருண், கனிஸ்கா ஆகியோரை போலீஸாா் தொடா்ந்து தேடி வருகின்றனா்.
புகையிலைப் பொருள்கள் கடத்தல் - 3 போ் கைது: விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கருவேப்பிலங்குறிச்சி காப்புக்காடு பகுதியில் உள்ள குரங்குப்பாலம் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த காரை சோதனையிட்டனா். அதில், அரசால் தடை செய்யப்பட்ட 45 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, காரில் இருந்த 3 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில், விருத்தாசலம் மணலூரைச் சோ்ந்த ரெங்கநாதன் (52), சேலம் மாவட்டம், ஆத்தூா் நரசிங்கபுரம் பாம்பாட்டி கிணறு பகுதியைச் சோ்ந்த பாலாஜி (43), ஆத்தூா் அருகே ராணிப்பேட்டையைச் சோ்ந்த கணேசன் (53) என்பதும், சேலத்தில் இருந்து கருவேப்பிலங்குறிச்சி பகுதிக்கு புகையிலைப் பொருள்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 45 கிலோ புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய காா், பைக் மற்றும் ரூ.81,200 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




