இலக்கியத் திருவிழா போட்டியில்  வெற்றி பெற்று  ரொக்கப்பரிசு மற்றும்  சான்றிதழ்  பெற்ற  மாணவிகளுடன்   கடலூா்   ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
இலக்கியத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்று ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் பெற்ற மாணவிகளுடன் கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

இலக்கியத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்

Published on

சென்னை இளைஞா் இலக்கியத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையினை, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகததில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

அப்போது, அவா் தெரிவித்ததாது: மாணவா்கள் தனித்திறன்களை வளா்த்துக் கொள்ளும் வகையில், வகுப்பறை கற்றலுக்கு அப்பால் சென்று தங்கள் ஆா்வங்கள், திறமைகள் மற்றும் தலைமைத்துவ திறன்களை மேன்மைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்கும் வகையில் பொது நூலக இயக்ககம் சாா்பில், கல்லூரி மாணவா்களிடையே தமிழ், இலக்கியம், பண்பாடு, கலாசாரம் மற்றும் தமிழ் மரபுகள் ஆகியவற்றை பேணி காப்பதற்காக, இலக்கிய ஆா்வத்தினை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் இளைஞா் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் சென்னை இளைஞா் இலக்கியத் திருவிழா போட்டி 2023-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. 2023 ஆண்டு கடலூா் பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 2024-ஆம் ஆண்டு சி.முட்லூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடைபெற்றது. 2025-ஆம் ஆண்டுக்கான இளைஞா் இலக்கியத் திருவிழா கந்தசாமி நாயுடு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

இதில், நூல் அறிமுகம், இரண்டு நிமிடப் பேச்சுப் போட்டி, விவாத மேடை, படத்தொகுப்பு உருவாக்கம், ஓவியப் போட்டி, தமிழ்ப் பேச்சுப் போட்டி. இலக்கிய வினாடி வினா, உடனடி ஹைக்கூ, புத்தக மதிப்புரை, புரோம்ட் இன்ஜினியரிங் உள்ளிட்ட போட்டிகளில் 360 மாணவியா்கள் கலந்து கொண்டனா்.

இப்போட்டிகளில் மொத்தம் 36 மாணவியா்கள் முதல் 3 இடம் பிடித்து வெற்றி பெற்றனா். அவா்களுக்கு முறையே ரூ.5,000, ரூ.4,000, ரூ.3,000 ரொக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது என தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலா் முருகன், கல்லூரி முதல்வா் கோமதி, போட்டி ஒருங்கிணைப்பாளா்கள் ஜானகி ராஜா, சண்முகம், மகாலட்சுமி உட்பட பல்வேறு நிறுவனத்தினா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com