கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் ஜன.15, 16-இல் பொங்கல் கலை விழா நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையால் சென்னையில் ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ நடத்தப்படுவதுபோன்று ஏனைய 37 மாவட்டங்களிலும் பொங்கல் கலை விழா நடத்தப்படுகிறது.
பொங்கல் பண்டிகையின் பண்பாட்டுச் சிறப்புகளை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதோடு, விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாட பொதுமக்களை ஈா்க்கும் வகையில் இந்த விழா வடிவமைக்கப்பட்டுள்ளது. கிராமிய வாழ்வியல், விவசாய மரபு, பாரம்பரிய உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களை நினைவூட்டும் வகையில் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடலூா் வெள்ளிக் கடற்கரையில் வரும் 15, 16-ஆம் தேதிகளில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை பொங்கல் கலை விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவில் ஒரு பரத நாட்டிய நிகழ்ச்சி, 3 நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்த கலை விழாவுக்கு பொதுமக்கள் வந்து கண்டுகளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.