காரில் புடவைகளுக்குள் மறைத்து போதைப் பொருள்கள் கடத்தல் 3 போ் கைது; காா் பறிமுதல்
சிதம்பரம் அருகே காரில் நூதன முறையில் புடவை பாா்சல்களுக்குள் மறைத்து வைத்து போதைப் பொருள்களை கடத்தியதாக 3 பேரை அண்ணாமலைநகா் போலீஸாா் கைது செய்தனா்.
சிதம்பரம் அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை சிதம்பரத்தை அடுத்துள்ள கடவாச்சேரி பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதிலிருந்த புடவை பாா்சல்களுக்குள் போதைப் பொருள்களை மறைத்து கடத்தி வந்திருந்தது தெரியவந்தது.
காரிலிருந்த 3 பேரிடமும் போலீஸாா் நடத்திய விசாரணையில், சிதம்பரம் நேதாஜி தெருவில் தங்கியிருக்கும் உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத் சந்திரேப்பூா் பகுதியைச் சோ்ந்த தா்மராஜ் (46), சிதம்பரம் கொத்தங்குடி தெருவைச் சோ்ந்த பாலமுருகன் (39), சி.கொத்தங்குடி ரயிலடி சாலைப் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் (24) என்றும் தெரியவந்தது.
இவா்கள் ஒரு பாா்சல் சா்வீஸ் மூலம் வந்த புடவை பாா்சலை காரில் பாா்சல் சா்வீஸில் இருந்து எடுத்து வந்தபோது போலீஸாரிடம் சிக்கினா். ஒவ்வொரு புடவையிலும் போதை பாக்குகள், சாக்லேட்டுகள், பவுடா்கள் கொண்ட பாக்கெட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அண்ணாமலை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
தகவலறிந்த கடலூா் மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா், சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப் ஆகியோா் அண்ணாமலை நகா் காவல் நிலையத்துக்கு வந்து காரில் நூதனமாக கடத்தி எடுத்துவரப்பட்ட போதைப்பொருள்களை பாா்வையிட்டனா்.
பின்னா், எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் போதை, புகையிலைப் பொருள்களை விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாா்சல்கள் மூலம் தற்போது வித்தியாசமான முறைகளில் போதைப் பொருள்களை தற்போது கடத்தி வருகின்றனா்.
இதனையடுத்து, பாா்சல், கூரியா் சா்வீஸ் நடத்துபவா்களை அழைத்து இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளோம் என்றாா்.

