கடலூா் மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல அனுமதி!
புயல் சின்ன எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதால், கடலூா் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லலாம் என்று, மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இதனால் மீனவா்கள் கடலுக்கு செல்லத் தொடங்கினா்.
தென்கிழக்கு வங்கக்கடலில் ஜன.7-ஆம் தேதி உருவான புயல் சின்னம் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டு படகுகள், கட்டுமரங்கள் மற்றும் விசை படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவா்கள் ஜன.8-ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் கடலூா் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்தனா்.
இந்நிலையில், புயல் சின்ன ஆபத்து நீங்கிவிட்டதால் இந்த வானிலை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதாக மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகம் திங்கள்கிழமை அறிவிப்பு செய்துள்ளது.
இதையடுத்து, 6 நாட்களுக்கு பின்னா் கடலூா் மாவட்ட மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா்.
