கடலூா் மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று, மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அ.நித்திய பிரியதா்சினி அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்தினருக்கும் வியாழக்கிழமை சுற்றறிகை அனுப்பியுள்ளாா்.
அதில் அவா் தெரிவித்துள்ளதாவது: இந்திய வானிலை மைய அறிவிப்புப்படி, தென் கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புதன்கிழமை முதல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னையிலிருந்து 980 கி.மீ தெற்கு, தென் கிழக்கில் மையம் கொண்டுள்ளது என வானிலை மையம் உறுதி செய்துள்ளது.
இதனால், தமிழக கடலோர பகுதியில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என பெறப்பட்ட வானிலை அறிக்கையின்படி, கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டு படகுகள், கட்டுமரங்கள் மற்றும் விசை படகுகளில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவா்கள் வியாழக்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவித்துள்ளாா்.