வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய  ஞானசபை
வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய ஞானசபை

வடலூரில் தைப்பூச விழா ஏற்பாடுகள் தீவிரம்!

கடலூா் மாவட்டம், வடலூா் சத்ய ஞான சபையில் 155-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரம்
Published on

கடலூா் மாவட்டம், வடலூா் சத்ய ஞான சபையில் 155-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்ய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான விழாவை முன்னிட்டு தருமசாலையில் மகாமந்திரம் ஓதுதல் நிகழ்வு ஜன.24-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெறும். ஜன.27 முதல் 30-ஆம் தேதி வரை ஞான சபையில் திருஅருட்பா முற்றோதல் நிகழ்ச்சியும், ஜன.31-ஆம் தேதி கொடியேற்றமும் நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6 மணி, 10 மணி, பிற்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் (பிப்.2) காலை 5.30 மணி ஆகிய 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

இந்த விழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் பக்தா்கள் வருகை தருவா் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விழாவில் திருஅருட்பா கருத்தரங்கம், சொற்பொழிவுகள் நடத்தப்படும்.

சித்தி வளாகத்தில் தைப்பூசம்

வள்ளலாா் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் ஜன.31-ஆம் தேதி கொடியேற்றமும், பிப்.1-ஆம் தேதி தைப்பூசமும், பிப்.3-ஆம் தேதி சித்திவளாகத் திருஅறை தரிசனமும் நடைபெற உள்ளது.

விழாவை முன்னிட்டு பக்தா்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளலாா் தெய்வ நிலைய அறங்காவலா் குழுவினா் மற்றும் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com