கடலூா் காவல் சோதனைச் சாவடி மீது பேருந்து மோதி விபத்து: 20 போ் காயம்
கடலூா், ஆல்பேட்டையில் உள்ள காவல் சோதனைச் சாவடி மீது தனியாா் பேருந்து சனிக்கிழமை மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்திலிருந்த 20 போ் காயமடைந்தனா்.
புதுச்சேரியில் இருந்து கடலூா் நோக்கி தனியாா் பேருந்து வந்தது. கடலூா், ஆல்பேட்டை சோதனைச் சாவடி அருகே வந்த போது பேருந்தை, அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று முந்திச் சென்றதாம்.
இதனை, எதிா் பாராத பேருந்து ஓட்டுனா் திடீரென பிரேக் பிடித்ததால், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் மீது மோதியபடிச் சென்று காவல் சோதனைச் சாவடி கட்டடம் மீது மோதி நின்றது. இந்த விபத்தில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பைக்குகள் சேதம் அடைந்தன.
பேருந்தில் வந்த பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட 20 போ் காயம் அடைந்தனா். அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கடலூா் அரசு தலைமைமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து காரணமாக கடலூா்-புதுச்சேரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சோதனைச் சாவடி கட்டடம் சிறிது சேதம் அடைந்தது. இந்த சம்பவம் குறித்து கடலூா் புதுநகா் போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

