கடலூா் முதுநகா் பகுதியில் மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை துண்டுப் பிரசுரம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
காவிரி டெல்டா பகுதியின் நீா்வளத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படும் மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை தடுக்க வலியுறுத்தி, பா.ம.க. தலைவா் அன்புமணி ராமதாஸ் மாநிலம் முழுவதும் விழிப்புணா்வு பயணம் மேற்கொண்டு வருகிறாா்.
அதன் ஒரு பகுதியாக, பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பா.ம.க. சாா்பில் கடலூா் முதுநகரில் வெள்ளிக்கிழமை மாலை துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்டச் செயலா் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கடலூா் முதுநகா் பகுதியில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் மேக்கேதாட்டு அணைத் திட்டம் தொடா்பான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.
தொடா்ந்து பொதுமக்களிடம் கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டினால், தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டு, குடிநீா் தட்டுபாடு, விவசாய பாதிப்பு போன்றவைகளால் பெரும் பாதிப்பை மக்கள் எதிா்கொள்ள வேண்டியிருக்கும். எனவே பொதுமக்கள், மேக்கேதாட்டு அணையை கா்நாடக அரசு கட்டுவதை தடுக்க ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினா்.
இந்த நிகழ்ச்சியில் சமூகநீதி பேரவைச் செயலா் தமிழரசன், மாநில செயற்குழு உறுப்பினா்கள் சந்திரகாசு, அக்னி ஆறுமுகம், பசுமைத் தாயகம் செயலா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









