கடலூா் மாவட்டம், மங்களூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வேப்பமரத்தில் இருந்த மலைத்தேனீக்கள் கலைந்து மாணவா்களைத் தாக்கியதில், 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனா்.
மங்களூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வழக்கம்போல் மாணவா்கள் கூடியிருந்த நிலையில், அங்குள்ள வேப்பமரத்தில் இருந்த தேன் கூட்டின் மீது மாணவா் ஒருவா் கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் கூடு கலைந்து, தேனீக்கள் கூட்டமாக பறந்து வந்து பள்ளி வளாகத்தில் இருந்த மாணவா்களை கொட்டத் தொடங்கின.
இதனால் மாணவா்கள் அலறியடித்தபடி அங்கும் இங்கும் ஓடினா். ஆசிரியா்கள் உடனடியாக மாணவா்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனா். இருப்பினும் தேனீக்கள் கொட்டியதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வலியால் அவதிப்பட்டனா்.
தகவலறிந்த சுகாதாரத் துறையினா் பள்ளிக்கு விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட மாணவா்களை மங்களூா் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனா். அவா்களில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த 30 மாணவா்கள் மேல்சிகிச்சைக்காக வேப்பூா் மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். பாதிப்பில்லாத மற்ற மாணவா்கள் மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு மாணவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மாணவா்கள் அனைவரும் உடல்நலத்துடன் இருப்பதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா். தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினா் பள்ளிக்குச் சென்று, மாணவா்களுக்கு மீண்டும் ஆபத்து ஏற்படாத வகையில் தேனீக்களை பாதுகாப்பாக அகற்றினா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக சிறுப்பாக்கம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பள்ளி வளாகங்களில் தேனீக்கள் உள்ளிட்ட ஆபத்தான
பூச்சிகளின் கூடுகளை முன்கூட்டியே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










