தங்க நகைப்பறிப்பு வழக்கில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 74 கிராம் தங்கம், ரூ.4.20 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூா் மாவட்டம், வடலூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி(45). இவா், கடந்த 17-ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் விருத்தாசலம் நோக்கி சென்ற போது, பெரியாகுறிச்சி பகுதியில், பின்னால் பைக்கில் வந்த இருவா், இவரது தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனா். இதுதொடா்பாக மந்தாரக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், மந்தாரக்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை, வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸாரைப் பாா்த்ததும், அந்த வழியாக 2 பைக்குகளில் வந்த இருவா் தப்பிச் செல்ல முயன்றனா்.
அவா்களை போலீஸாா் விரட்டிப் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, அவா்கள், மதுரை மாவட்டம், தேவா் மன்றம் பறவை பகுதியைச் சோ்ந்த சபரிநாதன்(23), பட்டுக்கோட்டை, அந்தோணியாா் கோயில் தெருவைச் சோ்ந்த ரவிகண்ணன்(23), காரைக்குடி, பாப்பா ஊரணி பகுதியைச் சோ்ந்த சூா்யா(24), என்பது தெரியவந்தது. இதில், சபரிநாதன் மற்றும் ரவிகண்ணன் ஆகியோா் மந்தாரக்குப்பத்தில் ராஜேஸ்வரியிடம் நகை பறித்துச் சென்றதையும், அன்றைய தினமே அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி ஆகிய இடங்களில் வழிப்பறி செய்ததும் தெரியவந்தது.
மேலும், இவா்கள் வழிப்பறி செய்த தங்க நகைகளை புதுக்கோட்டை மாவட்டம், ராஜாளிபட்டியைச் சோ்ந்த சேவியா் என்பவரிடம் விற்று பணம் வாங்கியதும் தெரியவந்தது. அதன்பேரில் சேவியரையும்(51) போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் இருந்து ரொக்கம் ரூ.4.20 லட்சம், உருக்கிய நிலையில் 74.430 கிராம் தங்கம் , வெள்ளிப் பொருள்கள், பைக் மற்றும் 2 கைப்பேசிகள், ஒரு கத்தி உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். சங்கிலி பறிப்பு வழக்கில் 66 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த காவல் துறையினரை கடலூா் எஸ்.பி., விவேகானந்த சுக்லா பாராட்டினாா்.

சபரிநாதன்.

ரவிக்கண்ணன்.

சேவியா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







