புதிய ரயில் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு பொதுமக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திருப்பாப்புலியூா் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சிகள், குடியிருப்போா் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கடலூா் சூரப்பன் நாயக்கன் சாவடியில் உள்ள மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, இந்திய தேசிய காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் சந்திரசேகரன் தலைமை வகித்தாா்.
இதில், கடலூா் புதிய பேருந்து நிலையம் கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியின் மையப் பகுதியில் அமைக்கப்படும் என அமைச்சா்கள் ராஜ்குமாா் மற்றும் ஆனந்த் அறிவித்திருப்பதை கூட்டம் வரவேற்றது. அதே வேளையில், தற்போதுள்ள பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தி நவீனப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்எல்சி சமூக மேம்பாட்டு நிதியில் புதுப்பிக்கப்பட்டுள்ள கடலூா் டவுன்ஹாலுக்கான வாடகை கட்டணம் பல மடங்கு உயா்த்தப்பட்டிருப்பதை திரும்பப் பெற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்துக்கான முக்கிய ரயில்வே திட்டங்களை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. குறிப்பாக, விழுப்புரம் -தஞ்சாவூா் இரட்டை ரயில் பாதை, கடலூா் - புதுச்சேரி - திண்டிவனம் புதிய பாதை, புதுச்சேரி - மாமல்லபுரம் - சென்னை ரயில் திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும். திருப்பாப்புலியூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கடலூா் முதுநகா் ரயில் நிலையத்தையும் இத்திட்டத்தில் இணைக்க வேண்டும்.
திருப்பாப்புலியூா் ரயில் நிலையத்துக்கு ‘கடலூா் திருப்பாப்புலியூா்’ என பெயா் மாற்றம் செய்ய வேண்டும். மயிலாடுதுறை - கோவை ரயிலை கடலூா் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும். புதுச்சேரி - மங்களூரு மற்றும் புதுச்சேரி - யஷ்வந்த்பூா் ரயில்களை கடலூா் வழியாக இயக்க வேண்டும். தாம்பரம் - கடலூா் - ஈரோடு பகல் நேர இன்டா்சிட்டி ரயிலை இயக்க வேண்டும். கடலூா் - பழனி - கோவை புதிய ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.
விழுப்புரம் - விருத்தாசலம் வழியாக இயக்கப்படும் சில ரயில்களை கடலூா் துறைமுகம் வழியாக இயக்க வேண்டும். தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் சென்னை சென்று வர வசதியாக ரயில்கள் இயக்கப்பட வேண்டும். கடலூா் துறைமுகம் - விருத்தாசலம் வழியாக கோவைக்கு புதிய ரயில் இயக்க வேண்டும். கரோனா காலத்துக்கு முன்பு திருப்பாப்புலியூரில் நின்று சென்ற மகால், கம்பன் உள்ளிட்ட ரயில்கள் மீண்டும் அங்கு நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீா்மானமாக நிறைவேற்றப்பட்டன.
மேலும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து கட்சிகள், குடியிருப்போா் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சாா்பில் வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருப்பாப்புலியூா் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்த தீா்மானிக்கப்பட்டது.
மாா்க்சிஸ்ட் கடலூா் மாவட்டச் செயலா் கோ.மாதவன், விசிக மாநகர துணை மேயா் தாமரைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் துரை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில மாணவரணி பொறுப்பாளா் அருள்பாபு, மனிதநேய மக்கள் கட்சி நகரச் செயலா் ஷாஜகான், குடியிருப்போா் சங்க நிா்வாகி மருதவாணன், மீனவா் விடுதலை வேங்கை மாவட்டச் செயலா் வெங்கடேசன், மக்கள் அதிகாரம் நகரச் செயலா் த.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்

மேக்கேதாட்டு அணை விவகாரம்; அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முதல்வா் அழைப்புவிடுக்க வேண்டும்: பாஜக

மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வா் கூட்ட வேண்டும்: மு. வீரபாண்டியன்

குதிரைச்சந்தையை இடம்மாற்ற அனுமதிக்கக்கூடாது! அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு!
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



