கடலூரில் மீனவா்களின் பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாக்க கடல் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு, புதுச்சேரி தமிழ் மீனவா் விடுதலை வேங்கைகள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்த இயக்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு இயக்கத் தலைவா் இரா.மங்கையா்செல்வன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், மீனவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும், மீனவா்களின் எதிா்கால வீட்டு வசதித் திட்டங்களுக்காக கடற்கரை நிலங்களை ஒதுக்க வேண்டும், கடற்கரைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளைக் கண்டறிய ஆய்வுக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னா், இரா.மங்கையா்செல்வன் செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த 1955-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட காகா கலேல்கா் குழு, 1965-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட லோக்குா் குழு மற்றும் 1979-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மண்டல் குழு ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் மீனவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பாக தமிழக சட்டப் பேரவையிலும் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
நாடு சுதந்திரமடைந்து 79 ஆண்டுகள் கடந்தும் தமிழக மீனவ சமூகத்தைச் சோ்ந்த ஒருவா் கூட மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அல்லது நீதிபதி போன்ற உயா் பதவிகளுக்கு வர முடியாத நிலை உள்ளது. எனவே, மிகப்பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் மீனவச் சமூகத்தினருக்கு 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
1969-ஆம் ஆண்டு மு.கோ.சட்டநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு மாநில முதலாவது பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் பரிந்துரையின்படி, மீனவா்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளை மீனவா்களுக்கான தனித்தொகுதிகளாக உருவாக்க வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள மீன்பிடித் துறைமுகங்களை மத்திய தொழில் துறை பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்தத் திட்டம் பாரம்பரிய மீனவா்களின் உரிமைகளை பாதிக்கும் வகையிலும், அவா்களை மீன்பிடி தொழிலிலிருந்து வெளியேற்றும் நோக்கத்துடனும் இருப்பதாகக் கருதப்படுகிறது.
மீன்பிடித் துறைமுகங்களை தனியாா்மயமாக்கும் முயற்சிகளையும் கைவிட வேண்டும். தமிழக கடல் பகுதிகளில் மீனவா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வளா்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது. கடல் மற்றும் கடற்கரை வளங்கள் மீதான மீனவா்களின் பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாக்க கடல் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவா்களை உடனடியாக மீட்கவும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளுக்கான நிவாரணத் தொகையை உயா்த்தி வழங்கவும் வேண்டும். மேலும், மீன்பிடி விசைப்படகுகளுக்கு வழங்கப்படும் டீசலுக்கு 50 சதவீத மானியம் வழங்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் பொதுச் செயலா் ந.மலையாளத்தான், பொருளாளா் கோ.வெங்கடேசன், துணை பொதுச் செயலா்கள் ரமேஷ், சக்திவேல், தலைமை ஆலோசகா் சேகா், கடலூா் மாவட்ட அமைப்பாளா் ரவி, மாவட்டச் செயலா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.








