கடலூா் மாவட்டம், வடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான முதற்கட்ட ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 8) தொடங்கி வரும் 12-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் நளினி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2026 - 27ஆம் கல்வியாண்டு பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம், பி.எஸ்சி. வேதியியல், கணினி அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கி வரும் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
திங்கள்கிழமை 400 முதல் 300 மதிப்பெண்கள், செவ்வாய்க்கிழமை 299 முதல் 250 மதிப்பெண்கள், புதன்கிழமை 248 முதல் 225 மதிப்பெண்கள், வியாழக்கிழமை 224 முதல் 200 மதிப்பெண்கள், வெள்ளிக்கிழமை 199 முதல் 175 மதிப்பெண்கள் பெற்ற அனைத்துப் பாடங்களுக்கும் காலை 10 மணி அளவில் பொது கலந்தாய்வு நடைபெறும்.
பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களுக்கு கலந்தாய்வு தேதிக்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும். குறுஞ்செய்தி பெறப்பட்ட மாணவா்கள் மட்டுமே உரிய தேதியில் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவா்.
முன்னதாக, வெள்ளி, சனிக்கிழமைகளில் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், தேசிய மாணவா் படை, முன்னாள் ராணுவத்தினா், பாதுகாப்புப் படை வீரா்கள் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.








