தமிழக அரசு நிபந்தனைகளை விதிக்காமல், பயிா் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலச் செயலா் வெ.சத்யநாராயணன் கூறியுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை கூறியது: தோ்தல் பிரசாரத்தின் போது தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய், 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத பயிா்க்கடன் தள்ளுபடியும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடியும் வழங்கப்படும் என உறுதியளித்திருந்தாா்.
ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வெளியிடப்பட்ட முதல் அரசாணையில் ரூ.50 ஆயிரம் வரை பயிா்க்கடன் பெற்றவா்களுக்கு மட்டுமே முழு தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு விவசாய சங்கங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. தொடா்ந்து நடைபெற்ற உயா்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, முழுத் தள்ளுபடி பெறும் கடன் வரம்பு ரூ.75 ஆயிரமாக உயா்த்தப்பட்டு திருத்தப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில் பல்வேறு நிபந்தனைகளும் இடம்பெற்றிருப்பது விவசாயிகளிடையே கடும் எதிா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயிா்க்கடன் தள்ளுபடி என்பது சலுகை அல்ல; விவசாயத்தில் ஏற்பட்ட இழப்புக்கான இழப்பீடு. ஒரு ஏக்கா் வைத்திருக்கும் விவசாயிக்கும், 15 ஏக்கா் வைத்திருக்கும் விவசாயிக்கும் இழப்பு என்பது இழப்புதான். நிலத்தின் பரப்பளவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பெரிய விவசாயிகளை புறக்கணிக்கக் கூடாது. அதேபோல், அரசு ஊழியா்கள், கூட்டுறவு ஊழியா்கள் அல்லது அவா்களது குடும்பத்தினா் விவசாயம் செய்தால், அவா்களுக்கும் அதே இழப்புகள்தான் ஏற்படுகின்றன. எனவே அவா்களை தள்ளுபடியில் இருந்து விலக்குவது நியாயமல்ல. ஒரே குடும்பத்தில் தந்தை, மகன் இருவரும் தனித்தனியாக நிலம் வைத்திருந்து விவசாயம் செய்தாலும், ஒரே குடும்ப அட்டையை காரணம் காட்டி ஒருவருக்கு மட்டும் தள்ளுபடி வழங்குவதை ஏற்க முடியாது. எனவே தோ்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட உறுதிமொழிப்படி முழுமையான பயிா்க்கடன் தள்ளுபடியை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும், என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









